Wednesday, August 5, 2020

மும்பை இண்டியன்ஸுக்காக லசித் மாலிங்க றோயல் செலஞ்சர்ஸுக்காக இசுறு உதான...



ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 13ஆவது இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையின்  T20 கிரிக்கெட் அணித் தலைவர் லசித் மாலிங்கவும் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் இசுறு உதானவும் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லசித் மாலிங்க வழமைபோல் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இசுறு உதான றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் விளையாடவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நடப்பு சம்பியன் மும்பை அணியின் பயிற்றுநரான மஹேல ஜயவர்தன அவ்வணியின் பயிற்றுநராகத் தொடர்வார் எனவும் நம்பப்படுகின்றது.

இதேவேளை, இன்னும் சில இலங்கை வீரர்களை இண்டியன் ப்றீமியர் லீக்கில் விளையாடச் செய்யும் வகையில் லங்கன் பறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையில் சிறு மாற்றத்தை செய்ய ஸ்ரீலங்கா கிரிக்கெட் எண்ணியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லங்கன் ப்றீமியர் லீக் போட்டிகள் இம் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி நிறைவுபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னர் அறிவித்திருந்தது.

இதேவேளை இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் செப்டெம்பர் 19ஆம் திகதி ஆரம்பித்து நவம்பர் 10ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் இலங்கை வீரர்கள் தங்குதடையின்றி ஐபிஎல்லில் பங்குபற்றுவதற்கு ஏதுவாக எல்பிஎல் போட்டிகளை முன்கூட்டியே ஆரம்பிப்பது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆராய்ந்து வருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை, லங்கன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்குரிய பிரதான அனுசரணையாளருக்கான விண்ணப்பங்கள் கடந்த வெள்ளிக்கிழமைவரை ஏற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!