Friday, August 28, 2020

19 ஆம் திருத்தத்தின் சட்டத்தின் சிறப்பம்சங்கள் ஒரு கண்ணோட்டம்


நாட்டில் பரவலாக பேசப்படும் 19ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான சிறப்பம்சங்கள் பற்றிய சிறிய தொகுப்பு.

* ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் மக்களால் தெரிவு செய்யப்பட முடியாது. 

* ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும். 

* ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வைத்திருக்க ஏற்பாடுகள் இல்லை. 

* இரட்டைப் பிரஜையொருவர் ஜனாதிபதியாகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ முடியாது.

* ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது

* பாராளுமன்றம் நிராகரித்த சட்டமூலம் ஒன்றினை ஜனாதிபதியானவர்  மக்கள் தீர்ப்புக்கு விட்டு சட்டமாக்கும் ஏற்பாடு அகற்றப்பட்டுள்ளது.

* ஜனாதிபதி பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்கலாம். இதற்கு முன்னர் பாராளுமன்றத்தை ஒரு ஆண்டின் பின்னர் கலைக்க முடிந்தது.

* ஜனாதிபதி பாராளுமன்றத்தை நான்கரைஆண்டுகளுக்குள் கலைக்கவேண்டுமெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். இதற்கு முன்னர் ஒரு ஆண்டிற்குள் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டில் ஒரு பெரும்பான்மை போதுமானது.

* பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். இதற்கு முன் ஒருவாரத்திற்கு முன்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படவேண்டியிருந்தது.

* ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையுடனேயே அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் முடியும். இதற்கு முன்னர் பிரதமரின் ஆலோசனை கட்டாயமாக்கப்படவில்லை.

*அரச தாபனங்களிலிருந்து தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பிரஜைகளுக்கு உண்டு. இதற்கு முன்னர் இவ்வேறுபாடு இல்லை.

* ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். இதற்கு முன்னர் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

* ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 35 ஆகும். முன்னர் குறைந்தபட்ச வயதெல்லை 30 ஆகும்.

* அமைச்சரவை அமைச்சர்களுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 30 வயது வரையும் ஏனைய அமைச்சர்களுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 40 வயது வரையும் இருக்கலாம். முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை.

* 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவையின் சம்மதத்துடனேயே ஜனாதிபதி உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கலாம்.அவையாவன
உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம், ஒம்புட்ஸ்மன் போன்ற பதவிகள் ஆகும். இதற்கு முன்னர் விரும்பியவாறு தெரிவு செய்ய முடியுமாக இருந்தது.

* அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசிலேயே ஜனாதிபதி உயர் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கலாம். அதாவது
தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, லஞ்சம் ஊழலை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு
இதற்கு முன்னர் ஜனாதிபதி விரும்பியவாறு தெரிவு செய்து நியமிக்க முடியுமாக இருந்தது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!