Wednesday, July 15, 2020

அனைவரும் நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடாது பின்பற்ற வேண்டும் -ஜனாதிபதி


கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது நிறுவனப் பிரதானிகளின் பொறுப்பாகும் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை சமூக ரீதியாக வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் அதற்கு ஒரு உதாரணமாக வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆகவே சமுதாய ரீதியாக இலகுவாகச் செய்யக்கூடிய பரிசோதனைகளை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளதன் அவசியத்தையும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் ஒழிப்பு செயலணியுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடு சுமுகமான நிலையை அடைந்திருந்தாலும், நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் கைவிட கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல் போன்ற இலகுவான பரிசோதனைகளை தினமும் முன்னெடுப்பதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகக் கவசம் அணிதல், கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன எந்த நேரமும் பின்பற்றப்பட வேண்டியவைகளாகும் என்றும் எவருக்காவது காய்ச்சல், தொண்டைவலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அதுபற்றி புரிந்துகொண்டு சமூகத்தில் சேர்ந்து வாழாது தனித்திருந்து நோய்த் தொற்று ஒழிப்புக்கு பங்களிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!