Thursday, July 2, 2020

”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” - மஹிந்த ராஜபக்ஷ

 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை நிரந்தர தீர்வொன்று எட்டப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திர உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், தமது அரசாங்கம் அந்த பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளியிட்ட கருத்து பிழையானது என பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

ஆணையிறவு பகுதியில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இலங்கை ராணுவத்தை கொலை செய்ததாக கருணா அம்மான் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வினவிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த முன்னாள் போராளிகள் 12,500 பேருக்கு தாம் மன்னிப்பு வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் கருணா அம்மானும் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தை தன்னால் தனித்து செய்ய முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியே தீர்வை பெற்றுகொடுக்க வேண்டும் எனவும், கலந்துரையாடல்களை நடத்த தான் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு தான் வழங்கிய அதிகாரத்தை ஐ.தே.க சூறையாடியதாகவும் மேலும் 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த தான் வழங்கிய அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் சூறையாடியதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த மாகாணங்களில் யுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாதிருந்த சந்தர்ப்பத்தில், பல அழுத்தங்களுக்கு மத்தியில் தான் அந்த தேர்தலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் என தெரிந்துகொண்டே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தான் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தன்னால் வழங்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை, கடந்த ஆட்சியாளர்கள் தேர்தல் நடத்தாது, அதனை சூறையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!