பாடசாலை வேன்களுக்கு வர்ணக்குறியீடு பாடசாலை சேவை வேன்களுக்கு வர்ணக்குறியீடு பயன்படுத்தும் புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பாடசாலை சேவை வேன் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை (07) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாடசாலை வேன்களுக்கு வர்ணக்குறியீட்டை அறிமுகப்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்திற்கு அமைய அனைத்து பாடசாலை வேன்களும் மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கவேண்டும் எனும் யோசனையையும் அமைச்சர் முன்வைத்துள்ளார். 

ஆயினும் குறித்த தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாடசாலைகள் வேன் சேவைகள் சங்கம் இவ்வாறு நிறம் பூசுவதற்கான செலவு அதிகம் என தெரிவித்துள்ளது. 

இதனால் சேவையிலிருக்கும் வேன்களுக்கு மஞ்சள் வர்ண பட்டி பூசப்படவேண்டும் என்பதோடு  எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யப்படும் வேன்களுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்டதும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு புதிய சட்டத்திற்கான அங்கிகாரம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.