சமீபத்தில் சீனா செயலிகளைத் தடை செய்த இந்திய அரசு டிக் டாக் செயலி பயன்பாட்டிற்கும் தடை விதித்தது. தற்போது இந்தியாவைப் போல அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூட டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறது.
யூடியூப்பை போல டிக் டாக்கும் ஓர் இலவச செயலி தான். டிக் டாக்கில் ஒரு நிமிட காணொளியைப் பதிவிடலாம், மேலும் அந்த செயலியில் ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் பாடல்களை பயன்படுத்தி புதிய காணொளிகளை உருவாக்கலாம்.
திரைப்படங்களின் நகைச்சுவை வசனங்களுக்கும் உதடு அசைத்து காணொளியை உருவாக்க முடியும். ஒரு டிக் டாக் பயன்பாட்டாளர் 1000 பின் தொடர்பாளர்களைப் பெற்ற பிறகு அவர்களுக்கு சில பரிசுகள் வழங்கப்பட்டது. அந்த பரிசுகளைப் பணமாகவும் பயன்பாட்டாளர்கள் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது.
1000 பின் தொடர்பாளர்களைப் பெற்ற பிறகு நேரலையில் தோன்றி தனது ரசிகர்களுடன் உரையாற்றும் சலுகையும் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த செயலியின் மூலம் பயன்பாட்டாளர்கள் குறுஞ்செய்திகள் அனுப்பி உரையாடும் வசதியும் இருந்தது.
2019ம் ஆண்டு அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் டிக் டாக் இடம்பெற்றிருந்தது. கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோதும் டிக் டாக் பயன்பாட்டாளர்கள் அதிகரித்தனர்.
அதே நேரத்தில் மத்திய சீனாவில் டிக் டாக் போல மற்றொரு செயலியான டௌயின் மிக பிரபலமாக இருந்தது. டௌயின் செயலியை உலகம் முழுவதும் உள்ள இரண்டு பில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலியை அன்றாடம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 800 மில்லியனாக உள்ளது.
டிக் டாக் செயலிக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு என்ன ?
டிக் டாக் என்ற செயலி மூன்று வெவ்வேறு செயலிகளாக வெளிவந்தது. முதல் கட்டமாக 2014ம் ஆண்டு அமெரிக்காவில் மியூசிக்கலி என்ற செயலியாக வெளியானது. அதன் பிறகு 2016ம் ஆண்டு சீனாவின் மிக பெரிய தொழில் நுட்ப நிறுவனமான பைட் டான்ஸ் டௌயின் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.
இதே பைட்டான்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு தனது செயலியை டிக் டாக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு 2018ம் ஆண்டு பைட்டான்ஸ் நிறுவனம் மியூசிக்கலி செயலியை வாங்கி தனக்கு சொந்தமாக்கியது. டிக் டாக் மற்றும் மியூசிக்கலியை இணைத்து ஒன்றாக இயக்க துவங்கியது.
ஆனால் எப்போதுமே டிக் டாக் செயலியை நிர்வகிக்க அதன் தலைமை பொறுப்பில் சீனர்களை அமர்த்த பைட்டான்ஸ் நிறுவனம் தயக்கம் காட்டியது. டிஸ்னியின் மூத்த முன்னாள் நிர்வாகியான கெவின் மேயரை டிக் டாகின் தலைமை நிர்வாகியாக பைட்டான்ஸ் நிறுவனம் நியமித்தது.
டிக் டாக் தனது பயன்பாட்டாளர்களிடம் இருந்து அதிக அளவில் தரவுகளை சேகரிக்கிறது.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் எப்படி தரவுகளை சேகரிக்கிறதோ அதே போல தான் டிக் டாக்கும் சேகரிக்கின்றன. இருப்பினும் அமெரிக்காவின் தனியார் தகவல் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று டிக் டாக் செயலி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.