Friday, July 3, 2020

கொவிட் தொற்றை அடையாளம் காண பீ.சீ.ஆர் கருவியை ரோட்டறி கழகம் வழங்கியுள்ளது.

கொவிட் 19 தொற்றை விரைவாக அடையாளம் காண்பதற்கு முழுமையான பீ. சீ.ஆர் தன்னியக்க உபகரணம் ஒன்றை சர்வதேச ரோட்டரி கழகம், அரச வைத்திய ஆராய்ச்சி நிலையத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

பீ. சீ.ஆர் உபகரணம் தொடர்பான தெளிவை ஜனாதிபதிக்கு வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

முழுமையான தன்னியக்க புதிய பீ. சீ.ஆர் உபகரணத்தின் பெறுமதி இரண்டு கோடியே இருபது இலட்சம் ரூபாவை விடவும் அதிகமாகும்.

அதன்மூலம், ஆராய்ச்சிகளின்போது முகங்கொடுக்கும்
மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முடியும் என்பது முக்கிய விடயமாகும்.

விரைவாகவும், துல்லியமாகவும், அதிக செயற்திறனுடனும் பரிசோதனைகளை முடிக்க புதிய உபகரணத்தின்
மூலம் முடியும் என்று வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் முகங்கொடுக்கக்கூடிய வேறு விதமான நோய்க்கிருமிகளையும் அடையாளம் காண்பதற்கும் புதிய பீ. சீ.ஆர் உபகரணத்தைப் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

கொவிட் ஒழிப்புக்காக வைத்திய ஆய்வு உபகரணங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு ரோட்டறி கழகம் 12 கோடி ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ளது.

அதற்காக கழகப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்ஹ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்ஹ, வைத்திய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார, ரோட்டறி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் தலைவர் செபஸ்தியன் கருணாகரன், முன்னாள் தவிசாளர் கே. ஆர். ரவீந்திரன், பரிந்துரைக்கப்பட்டுள்ள தவிசாளர் புபுது த சொய்சா உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் வேறு ரோட்டறி கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.



Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!