Friday, July 24, 2020

நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் ஒரு புரட்சிகர மாற்றத்தைப் பதிவு செய்ய தயாராகிவிட்டதாக தெற்கு மக்கள் ஜனாதிபதியிடம் உறுதி


பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பாரிய சவால்களுக்கு மத்தியில் எமது அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களைப் பலப்படுத்தி இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் புரட்சி ஒன்றை நிகழ்த்துவதற்குத் தெற்கு தயாராகியுள்ளது என காலி மாவட்ட மக்கள் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வருட கால வீழ்ச்சியினை தான் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதாக  அந்த மக்கள் குறிப்பிட்டதாகவும், எதிர்காலத் தலைமுறைக்கான தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு, இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் இந்த முறை தேர்தல் தீர்க்கமான ஒரு வாய்ப்பாகும் எனவும் அந்த மக்கள் குறிப்பிட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசாங்கத்தினது பங்காளிக் கட்சிகளின் வேட்பாளர்களினுடைய வெற்றிகளை உறுதிசெய்வதற்காக காலி மாவட்டத்தில் நேற்று ஜனாதிபதி பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது அங்குள்ள மக்கள் தன்னிடம் இவ்வாறான உறுதிமொழிகளை வழங்கியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் நெலுவ தேசிய பாடசாலைக்கு சென்றிருந்த ஜனாதிபதி அங்குள்ள குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

சிறிய ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையாளர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்ததோடு பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பெற்றுத் தந்தால் தான் எதிர்பார்க்கும் இலக்கை அடைந்துகொள்ள முடியுமென அம்மக்கள் குறிப்பிட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மதுவரி அதிகாரிகளின் சுற்றி வளைப்புகள் காரணமாக கைவிடப்பட்டுள்ள கித்துல் கைத்தொழிலை மீண்டும் கட்டியெழுப்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என மக்களால் கோரப்பட்டபோது, அதனை செய்துதர ஜனாதிபதியும் இணங்கியுள்ளார்.

பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிக்க வேண்டியதன் தேவை குறித்தும் அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் முன்பள்ளி ஆசிரியர்கள் பல இடங்களில் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்ததுடன், மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்குவது குறித்து ஏற்கெனவே சிந்திக்கப்பட்டுவருவதனையும் அவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வின்போது 9 வயதுடைய ஒரு சிறு பிள்ளை, தான் சேகரித்த உண்டியல் பணத்தை கொவிட் நிதியத்திற்காக ஜனாதிபதியிடம்  அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வந்துரம்ப பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் தேயிலை செய்கையாளர்களின் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் விளக்கப்பட்டுள்ளது.

பெளத்த அறநெறிப் பாடசாலைகளின் பாட விதானத்தில் உள்ள சில பகுதிகளை பாடசாலை பாட விதானத்திற்குட்படுத்தி பிள்ளைகளை அறநெறிப் பாடசாலைகளை நோக்கி வழிப்படுத்த முடியும் என இந்த சந்திப்பிற்கு வருகை தந்திருந்த மகாசங்கத்தினர் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தனர்.

தர்மாச்சாரி பரீட்சையில் சித்தி பெற்றிருப்பது அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கட்டாயமாக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு விசேட செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்பதனையும்,

கிராமிய பிரதேசங்களில் இடம்பெறும் அத்தகைய செயற்பாடுகள் குறித்து தமது பெயரைக் குறிப்பிடாது செயலணிக்கு தெரிவிப்பதன் மூலம், தாம் எதிர்பார்க்கும் இலக்கை மக்கள் விரைவாக அடைந்துகொள்ள முடியுமென்பதையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

உடுகம தள வைத்தியசாலையில் தீவிர சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன் எப்போதும் இல்லாத வகையில் மக்கள் உட்சாகத்துடன் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டுமென பென்தர எல்பிட்டிய கோணகல சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் மக்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்துருவ பிரதேசத்தில் சுமார் 40 வீடுகளுக்கு இது வரையில் குடிநீர் கிடைக்கப்பெறாத காரணத்தினால் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அப்பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.இந்த விடயத்தை உடன் கவனிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!