பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊழியர்களுக்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்

பொதுத் தேர்தலில் வாக்களிக்க தமது ஊழியர்களுக்கு தொழில்வழங்குநர்கள் விடுமுறை வழங்காவிட்டால், அது  நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படக்கூடிய குற்றம் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்களிப்பதற்காக ஊழியரால் விடுமுறை கோரப்படும் பட்சத்தில் வாக்களிக்க அது போதுமானதா என்பது தொடர்பில் ஆராய்ந்து விடுமுறை வழங்க தொழில்வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வாக்களிப்பதற்காக 4 மணிநேரத்திற்கு குறையாத காலம் சம்பள குறைப்பின்றி வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விடுமுறை காலம் மற்றும் ஊழியரின் பெயர் அடங்கிய பட்டியல் சேவை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் குறித்த சலுகையை பெற்றுக்கொள்ள முயன்ற ஊழியர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறும் தேர்தலில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் கோரிக்கை நிராகரிக்கப்படுமாக இருந்தால்  அது தொடர்பில் உடனடியாக மாவட்ட தேர்தல்கள் அலுவலக அதிகாரிகள், உதவி தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
பின்னர் குறித்த முறைப்பாடுகள் மாவட்ட தொழில் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.