Thursday, July 23, 2020

துப்பாக்கிச்சூட்டில் இலக்கான பத்திரிகையாளர் நேற்று காலை மரணம் - இந்தியா



டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் திங்கட்கிழமை இரவு தனது இரண்டு மகள்கள் முன்னால் சுடப்பட்ட உத்தர பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர் நேற்று காலை காலமானார்.

திங்கட்கிழமை இரவு விக்ரம் ஜோஷி தனது இரு மகள்களுடன் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை தாக்கி, பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டது.
இரு மகள்கள் உதவிக்காகச் சத்தமிடும் காட்சிகள் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
காசியாபாத் போலீஸ் இந்த வழக்கில் இதுவரை ஒன்பது பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  மூத்த காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது .
உத்தர பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பல கேள்விகளை அந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
உத்தர பிரதேச அரசு விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் கொடுப்பனவை அறிவித்துள்ளது. விக்ரமின் குடும்பம் இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டி, பிரேத பரிசோதனை நடைபெறும் மருத்துவமனை வளாகத்தில் போராடி வருகின்றனர்.
போலீஸின் இயலாமைக்கு தன் உயிரையே விலையாக விக்ரம் ஜோஷி கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நான்கு நாட்களுக்கு முன்பு, தனது உறவினர் ஒருவர் ஒரு கும்பலால் துன்புறுத்தப்படுவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் போலீஸ் இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனை தொடர்ந்தே அவர் தாக்கப்பட்டுள்ளார்.
ஒரு கும்பலால் அவர் தாக்கப்படும் காட்சி தெளிவாக சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு கும்பல் அவரை தாக்குகிறது. பின்னர் அவரை சுடுகிறது. விக்ரம் தரையில் விழுகிறார். அவரது மகள்கள் உதவி வேண்டி கதறுகிறார்கள். இந்த காட்சிகள் அந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன.
காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை மரணமடைந்தார்.
விக்ரம் ஜோஷிக்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தேசிய தலைநகர் பகுதி அருகே இருக்கும் ஒருபகுதியிலே சட்ட ஒழுங்கு நிலைமை இப்படி இருக்கிறது என்றால், உத்தர பிரதேசத்தில் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என பிரியங்கா காந்தி ஒரு ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!