தானிய இறக்குமதியை நிறுத்தியது அரசாங்கம்! உள்ளூர் அறுவடைகளுக்கு அதிக சந்தை வாய்ப்பு...

அரசாங்கம் தானிய இறக்குமதியை நிறுத்தியுள்ள காரணத்தினால் தானிய வகைகளை இனி அதிக விலைக்கு உள்நாட்டுச் சந்தைகளுக்கு வழங்கவுள்ளதுடன் வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்பு எமது விவசாய சமூகத்திற்கு இப்போது உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மேலும் சோளம், உழுந்து, பயறு, கௌப்பி, குரக்கன் போன்ற தானியங்களை அதிகம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுமாறும் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றையதினம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுமக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உரிய காலத்திற்கு உரம் மற்றும் நீர் கிடைக்குமானால் தடைகளின்றிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியும் என அங்குள்ள விவசாயிகள்  தெரிவித்த போது, அங்கு மட்டுமல்ல, ஆனால் நாடு முழுவதிலும் விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும்  என ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். 

அத்துடன் இயற்கை சேதன உரப் பாவனைக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அநுராதபுர மாவட்ட விவசாய சமூகம் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்கு உரியது என்பதனையும் அவர் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் கடமை நிறைவேற்று அதிபர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு குறித்த இடத்திலேயே அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன்
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் பாடசாலை அதிபர்களிடமும் கல்வி அதிகாரிகளிடமும் கேட்டறிந்துகொண்டார்.

ஒப்பந்த முறைமையில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அபிவிருத்திக் கட்டுமானச் செயன்முறைகள் காலதாமதமாகுவதாக கிராமவாசிகள் கவலை தெரிவித்த போது அது தொடர்பில் உடனடியாக விசாரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

மேலும் சோற்றுக் கற்றாழை, நெல் மற்றும் சோளப் பயிர்ச் செய்கை தமது பிரதேசத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாக மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாய சமூகம் முகங்கொடுத்துள்ள களஞ்சிய வசதிகள் குறித்த பிரச்சினைகள் குறித்தும் மக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது  அந்த விடயத்தை உடன் கவனத்தில் எடுப்பதாக அவரும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் மற்றும் விவசாய கடன் தொடர்பாக தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் மக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதன்போது மக்களுடன் உரையாடியுள்ளார்.