கிராமங்களைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை அடையாளம்கண்டு வங்கிச் சேவைகளை செயற்படுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து எமது மக்கள் வருகை தந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வரை காத்திருக்காமல், ஏற்றுமதி விவசாயத்தை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில்கள் உருவாகுவது மட்டும் அபிவிருத்தி ஆகாது என்பதை சுட்டிக்காட்டியதுடன், விவசாயத்தை மையப்படுத்தி கிராமிய தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேவையை மிகச் சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும்
அதற்காக, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வழிமுறை குறித்து கீழ் மட்டத்திலிருந்து கவனம் செலுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வணிக வங்கிகள் கடன்களை வழங்கும்போது உற்பத்தித்துறையை விடவும் வணிகப் பிரிவுக்கு அதிக கவனத்தை கொடுக்கின்றனர்.
ஆனால், பாரம்பரிய நடைமுறைகளுக்குள் மட்டுப்பட்டிருக்காது விவசாயிகளை உற்பத்திக்கு ஊக்குவிப்பது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொறுப்பாகும் என்பதனையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது உழுந்து, குரக்கன், பயறு உட்பட தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு ஊக்குவிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தந்தப் பிரதேசங்களுக்கு என இலக்குகளை நிர்ணயித்து வழங்கி, விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவதனையே அவர் வங்கிகளைக் கிராமத்திற்கு கொண்டு செல்லும் செயன்முறை என தெளிவுபடுத்தியுள்ளார்.
நீண்ட காலமாகத் தவணைக் கொடுப்பனவின் அடிப்படையில் பாரியளவு கடன்களைப் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனை குறிப்பிட்டதுடன் அரச வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான இலகு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் இக்கலந்துரையாடலில்
ஜனாதிபதியின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஹிந்த சாலிய, பொது முகாமையாளர் டி. குகன் உள்ளிட்ட பணிப்பளார் சபையின் அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.