Saturday, July 18, 2020

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது பதவியை துறந்துள்ளார்.



கலாநிதி.குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறை தலைவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.

இதற்காக அவர் கூறிய காரணமாவது பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது இராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது தன்னால் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராக தான் கடமையாற்றுவது இயலாத விடயம் என்றும் தனது சட்டத் தொழில் மூலம் தான் செய்து வந்த சமூகப் பங்களிப்பும் ஊடாட்டமும் தனது ஆசிரியப் பணியில் இணைபிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தான் ஈடுபடுவது திருப்தியை தர மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் சட்ட தொழிலில் ஈடுபடுவது கூடிய வருமானத்தை தரும் என்ற காரணத்திற்காக இந்த முடிவை  தான் எடுக்கவில்லை என்றும் அவ்வாறிருப்பின் அதனை 2010-ம் ஆண்டிலேயே எடுத்திருப்பேன் என்றும் வகுப்பறையில் மட்டும் முடங்கி இருக்கும் ஆசிரியராக கடமையாற்ற தான் தயாரில்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது விதிக்கப்பட்ட தடை பல்கலைக்கழகம் சுயாதீனத்தை முழுவதுமாக இழந்துவிட்டதற்கான முக்கியமான சான்று என்றும் தனது நலன்கள் தொடர்பில் சுயமாக முடிவு எடுக்க முடியாத பல்கலைக்கழகம் யாருக்காகச் செயற்படுகின்றது என்ற கேள்வியையும் அவர் இதன்போது எழுப்பியிருக்கிறார்.

நல்லாட்சி, சட்டத்தின் பாலான ஆளுகை , சுயாதீனம் ஆகியவற்றை தொலைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நல்லாசிரியர்களை ஏற்கவும் முடியாமல் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாமல் நலிவடைந்து கொண்டிருப்பதாக கலாநிதி குருபரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சட்டக்கல்வி மீதான தனது ஆர்வத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என தனது கடிதத்தில் கூறும் குருபரன் உயர் நீதிமன்ற வழக்கை தொடர்ந்து கொண்டு நடத்த போவதாகவும் தனக்கு சார்பாக கட்டளை ஆக்கும் பட்சத்தில் மீள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்நுழைய விண்ணப்பிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையின் இடைவிடா இயங்குகைக்கு தேவையான இயலுமான ஒத்தாசைகளை தான் வழங்குவேன் எனவும் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சரியான காரணங்கள் இல்லாமல் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளில் முதன்மையானதாக வைத்திருக்கும் விசாரணைக்கு வழக்கை உயர் நீதிமன்றம் எடுக்காமையும் இந்த முடிவை நோக்கி அவரை தள்ளி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!