புதிய கொவிட் தொற்று நிலைமை குறித்து ஆராய்ந்து, மேலதிக நடவடிக்கைகள் நேற்று திட்டமிடப்பட்டன


கொவிட் 19 நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை நாம் வெற்றிகொள்ள வேண்டும் என ஜனாதிபதி நேற்று செயலணியிடம் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோய்த் தொற்று பரவலுடன் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மிகவும் வெற்றிகரமாக  நடவடிக்கை எடுத்திருந்ததனையும் நேற்று ஜனாதிபதி நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் முகாம் என்ற கருத்துச்சிந்தனை குறித்து அப்போது எந்தவொரு நாடுமே கேள்விப்பட்டிருக்கவில்லை. அதனை நமது நாடே முதலில் அறிமுகப்படுத்தியிருந்தது. இன்று பெரும்பாலானவர்கள் அதனை மறந்து விட்டனர் என்பதனையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொவிட் 19 நோய்த் தொற்றுடைய சிலர் கண்டறியப்பட்டதுடன், உருவாகியுள்ள புதிய நிலைமை குறித்து ஆராய்வதற்காக கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை, இராணுவம், புலனாய்வுதுறை மற்றும் காவற்துறையினரின் பங்களிப்பை பெற்று ஜனவரி 26ஆம் திகதி கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சீனாவின் வூகான் மாநிலத்தில் நிர்க்கதியாக நின்ற எமது நாட்டின் மாணவர்களை மீட்டு வந்தது முதல் ஏனைய அனைத்து நாடுகளை விடவும் முன்னதாக, ஓர் அரசாங்கம் என்ற வகையில் மக்களை நாட்டுக்கு மீட்டுவரும் நடவடிக்கைகளை தாம் பொறுப்புடன் மேற்கொண்டதனையும் அவர் நேற்று நினைவுகூர்ந்தார்.

அரசாங்கம் ஒரு சிறந்த தலைமையை வழங்கித் தீர்மானங்களை எடுத்தமை மற்றும் அனைத்து துறைகளினதும் பங்களிப்புகளைப் பெற்றுக்கொண்டமை ஆகிய பண்புகளே, இந்த சவாலை வெற்றிகொள்வதற்கு அடிப்படையாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

74 நாடுகளிலிருந்து சுமார் 16,279 பேரை தாய் நாட்டுக்கு அழைத்து வந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, வீடுகளுக்கு அனுப்பி வைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 70 தனிமைப்படுத்தல் நிலையங்களைப் பராமரித்துப் பேணி தாம் மேற்கொண்ட பணிகளையும் அவர் நேற்று நினைவுப்படுத்தியிருந்தார்.

தனிமைப்படுத்தல் நிலையத்தை ஸ்தாபிப்பதற்குத் திட்டமிடுகின்றபோது பிரதேசவாசிகளின் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும்போது அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததாவும் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்காலத்திலும் எத்தகைய தடைகள் வந்தாலும் சவால்களை வெற்றிகொண்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார். 

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்ட நபர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அதனை அண்டிய நான்கு கொத்தனிகள் வரையான விரிந்த சுற்றுப்பகுதி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உருவாகியுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருப்பதைப் போன்று, எதிர்காலத்திலும் உருவாகும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

PCR பரிசோதனையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் நோய்த் தொற்று பரவுவதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்ட, இராஜாங்கனை உள்ளிட்ட, ஏனைய இடங்களில் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

நோய்த் தொற்று பற்றிய புதிய தகவல்களையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட் நோய்த் தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையுடன் இணைந்ததாகப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் நேற்றைய கலந்துரையாடலின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொவிட் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இரவு, பகல் பாராது தொடர்ச்சியாக பங்களிப்புகளை வழங்கிவரும் அனைவரையும் தான் பெரிதும் மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றைய கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கொவிட் செயலணியின் உறுப்பினர்களும் விசேட வைத்திய நிபுணர்களும் பங்குபற்றியிருந்தனர்.