கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் நெய்வேலி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட அனல்மின் நிலைய பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் முழுமை அடைந்த பிறகே எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 7ஆம் திகதி அன்று இரண்டாவது அனல்மின் நிலையத்திலிருந்த 6வது யூனிட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு மாதத்தில் மூன்றாவது முறையாக என்எல்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடலை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உறவினர்கள் மற்றும் காவல்துறை இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் மற்றும் நெய்வேலி காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.