5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களில் சீன நிறுவனத்தின் பங்கினை கட்டுப்படுத்த பிரிட்டன் அரசு முயற்சி

பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களில் சீன நிறுவனமான ஹுவாவேவின் பங்கை கட்டுப்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு முயன்று வருகிறது.
இது ஒரு தொழில்நுட்ப விவகாரம் மட்டுமல்ல. பிரிட்டனில் உள்நாட்டு அரசியல் மற்றும் அமெரிக்கா ,சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச அரசியலின் ஓர் அங்கமாகும்.
இந்த நடவடிக்கை அமெரிக்க அரசின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாமல்   ஹுவாவே நிறுவனத் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டால் பிரிட்டனையும் பொருளாதார ரீதியாகப் பழிவாங்க சீன அரசும் முயற்சி செய்யும் எனக் கூறப்படுகிறது.
5ஜி தொலைத்தொடர்புத் துறையில் ஹுவாவே நிறுவனம் பங்களிக்க ஆறு மாதங்களுக்கு முன்பு பலவிதமான கட்டுப்பாடுகளுடன் பிரிட்டன் அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது. 
ஆனால் அடுத்த ஆண்டு முதல் அந்த நிறுவனத்தின் பொருட்கள் எதையுமே பயன்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மிக நீண்ட தாமதங்கள் மற்றும் சட்டப்பூர்வமான போராட்டங்களுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் 5ஜி தொலைத்தொடர்புத் துறையில் ஹுவாவே நிறுவனத் தயாரிப்புகளை பயன்படுத்த பிரிட்டன் அனுமதித்தது. 
ஆனால் ஒட்டுமொத்த சந்தையின் பங்கில் 35 சதவீதம் மட்டுமே ஹுவாவே நிறுவனத்தின் பொருட்கள் இருக்க வேண்டும் என்று அப்போது பிரிட்டன் அரசு கட்டுப்பாடு விதித்தது.
இப்பொழுது அதையும் ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் பிரிட்டன் அரசு இறங்கியுள்ளது.
ஹுவாவே நிறுவனத்தை அதன் வன்பொருட்கள் மூலம் பிரிட்டனின் முக்கியமான தகவல்களைத் திருடவோ, உளவு பார்க்கவோ, இணைய வழித் தாக்குதல் நடத்தவோ, சீனா பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 ஆனால் ஹுவாவே நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்தது மட்டுமல்லாமல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை உண்டாக்குவதை விட நிறுவனத்தையும் மூடிவிட்டு செல்வேன் என்று அதன் நிறுவனரும் தெரிவித்திருந்தார்.
கடந்த மே மாதம் அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளில் ஒரு பகுதியாக அமெரிக்காவின் 'சிப்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஹுவாவே நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஹுவாவே நிறுவனம் பிரிட்டன் சந்தையில் முக்கியமானதாக இருக்கும் சூழலில் அமெரிக்கர்களுக்கு பதிலாக அதே அளவு தரத்திலான தயாரிப்புகளை இந்த நிறுவனம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா என்று பிரிட்டனின் தேசிய இணையப் பாதுகாப்பு மையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகமான பின்பு தொழில் தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களுக்காக பிற நாடுகள் சீனாவை அதிகமாக சார்ந்திருப்பது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
சீனா கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச மனநிலையும் உண்டானது.
இத்தகைய சூழலில் சீனாவின் தன்னாட்சிப் பிரதேசமாக உள்ள ஹாங்காங்கின் நிர்வாகத்தில் சீன அரசின் தலையீடு அதிகரித்துள்ளது. 
 ஹாங்காங்கில் வசிப்பவர்களை தேச துரோகம், தீவிரவாதம், வெளிநாட்டினருடன் சேர்ந்து அரசுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி சீன அரசு கைது செய்வதற்கு வழி வகை செய்யும் புதிய சட்டத்துக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டம் பெருமளவில் வெடித்தது.
அதை சீனா எதிர்கொண்ட விதம் சீன அரசு மென்மேலும் சர்வாதிகார தன்மையுடன் நடந்து கொள்வதாக விமர்சனங்களை உண்டாக்கியது.
ஹுவாவே நிறுவனத்தின் தயாரிப்புகளை 5ஜி தொலைத் தொடர்பில் பயன்படுத்தாமல் இருந்தால் தகவல் தொடர்பு சேவையில் பெருமளவில் பாதிப்பு உண்டாகும் என்று பிரிட்டனில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்தன. 
 அதன் காரணமாகவே 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் வேறு எந்த வகையில் தற்போதைய சேவைகளை தொடர முடியும் என்று பிரிட்டன் அதிகாரிகளும் ஆலோசித்து வந்தனர்.
ஏழு முதல் 10 ஆண்டு காலம் வரையிலான ஹுவாவே தயாரிப்புகளை பயன்படுத்தக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டால் அதன் மீது விமர்சனங்கள் எழுந்தாலும் பிரிட்டனின் 5ஜி தொலைதொடர்பு சேவை பெருமளவில் பாதிக்காமல் இருக்கும்.
இதுவே மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டால் ஹுவாவே நிறுவன தயாரிப்புகளுக்கு பதிலாக புதிய கருவிகளை வாங்க இன்றைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெருமளவில் செலவிட வேண்டியிருக்கும்.
இதன் காரணமாக தொலைத்தொடர்புத் துறையில் சேவையை பிரிட்டன் முழுவதும் விரிவு படுத்துவதிலும் பிரச்சனை உண்டாகும்.
5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதாக பிரிட்டன் அரசு அந்நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளது.அதில் ஏற்படும் தாமதம் பிரிட்டன் உள்நாட்டு அரசியலிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.