பரீட்சைகள் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்புஇம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியவற்றிற்கான திகதிகள் தொடர்பில் இந் நாட்களில் அறிவிக்காதிருப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  

நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  

இரண்டு பரீட்சைகளையும் நடத்துவதற்கான திகதிகள் தொடர்பில் நேற்று அறிவிக்கப்படவிருந்தது.  எனினும், COVID – 19 தொற்றை கருத்திற் கொண்டு, திகதிகளை தற்பொது அறிவிக்காதிருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதனிடையே ஒருநாள் மற்றும் சாதாரண விநியோக சேவைகள், இன்று (15) முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  எனினும், பரீட்சார்த்திகள் தமக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்களை மின்னஞ்சல் மூலமாக கோருவதன் மூலம் 48 மணித்தியாலங்களில் பெற்றுக் கொள்ள முடியுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 இது தொடர்பான மேலதிக தகவல்களை www.donets.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 011-2784323
அல்லது 1911 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்தும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.