இலங்கை கிரிகெட் அணி வீரர்களிடம் அமைச்சர் மஹிந்தானந்த மன்னிப்பு கேட்க வேண்டும்- நவீன் திஸாநாயக்க

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான நவின் திஸாநாயக்க அவர்கள் இலங்கை  கிரிகெட் அணி வீரர்களிடம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் மலையக மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு வாக்களிப்பதற்கே விரும்புகின்றனர் என்றும் முன்னால் அமைச்சர் திகாம்பரம் எனக்கு எதிராக போலியான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நான் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் கூறி எனக்கெதிராக தவறான கருத்துக்களை பரப்புகின்றார் என்றும் கூறினார்.
”பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்மானத்திற்கு வருகின்றன.இந்த விடயத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு எந்தவிதமான பொறுப்பும் கிடையாது என்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  நாளொன்றுக்கு 750 ரூபா தற்போது வழங்கப்படுகின்றது. இதனை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.
சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவி தொடர்பில் கனவு காணலாம் ஆனால் இது தொடர்பாக ஓகஸ்ட் 5 ஆம் திகதி மக்களே முடிவெடுப்பார்கள்.ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பிரிதொரு சின்னத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் ஐக்கிய தேசிய கட்சி நுவரெலிய மாவட்டத்தில் இரு ஆசனங்களை கைப்பற்றும் முடிந்தால் மூன்று வெல்லக்கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.