பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பி.சி.ஆர் அறிக்கைகள் இன்று கிடைக்கும்நேற்று பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை மாதிரிகளின் முடிவுகள் இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

ராஜாங்கனை பிரதேச 90 மாணவர்கள் மற்றும் ஹபராதுவ பிரதேச பாடசாலையின் 25 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட நேற்று பெறப்பட்ட மாதிரிகளின் பிசிஆர் அறிக்கைகள் இன்று வெளியாக உள்ளன.

ஹபராதுவ மற்றும் ராஜாங்கனை பிரதேசங்களில் அதிகளவானவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அதில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

முதன் முதலாக பாடசாலை மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று பதிவாகியது.

கந்தகாடு புனர்வாழ்வளிப்பு மையத்தின் ஆலோசகர் ஒருவரின் மகனான தரம் ஐந்தில் கற்கும் மாணவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். இம்மாணவன் கலந்துகொண்ட வகுப்புகளின் மாணவர்களை தேடும் முயற்சி நடைபெறுகிறது.

ராஜாங்கனை பிரதேசத்தில் 90 மாணவர்கள் உட்பட 150 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுர பிரதேச தொற்று நோயியல் வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.

முன்னதாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றும் மாரவிலயை சேர்ந்த ஆலோசகர் தோற்றுக்குள்ளானதாக இனம்காணப்பட்டார்.அவருடைய தாயார் மேலதிக வகுப்பு ஆசிரியையாக கற்பிப்பவர் என்றும் பல வகுப்புகளை நடத்தி உள்ளதாகவும் புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தினுசா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று கிடைக்கும் பிசிஆர் முடிவுகளின்படி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.