குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சிறையில் தற்கொலை

இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான வழக்கில் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் பிரஜை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

பிரான்ஸைச் சேர்ந்த 65 வயதான (Francois Camille Abello) பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பல முறை சென்று வந்திருக்கிறார்.  அந்த சுற்றுலாவின் போது, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த பிராங்கோயிஸ் கமிலி அபல்லோவை, கடந்த 25/06/2020 அன்று அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.  அவருடைய அறையில் இருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டனர்.

 இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபர் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.  பிராங்கோயிஸ் மடிக்கணினியில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் காணொளி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் நானா சுட்ஜானா கூறுகையில், இந்த நபர் குழந்தைகளை அணுகி அவர்களிடம் ஆசையாக பேசி அவர்களை கவர்ந்திழுப்பார் எனவும் அவருடன் நெருக்கமாக இருக்க ஒப்புக்கொண்டவர்களுக்கு 250,000 முதல் ஒரு மில்லியன் ரூபா வரை கொடுப்பார் எனவும் கூறினார். அப்படி நெருக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளாதவர்களை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.  

பல ஆண்டுகளாக பிராங்கோயிஸ் 305 இந்தோனேசிய குழந்தைகளை துன்புறுத்தியுள்ளதாகவும், இதில் பலியானவர்கள் இருக்கலாம் என்றும் காவல்துறையினர் நம்புகின்றனர்.