வெளிநாட்டு பொறியியலாளர்கள் வேண்டாம்; நிர்மாணத்துறைக்கு இனி உள்நாட்டு பொறியியலாளர்களே! - ஜனாதிபதி


நகர மற்றும் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்த ஒன்றிணையுமாறு  உள்நாட்டு பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

குடிப்பதற்கும் பயிர்ச் செய்கைக்கும் நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் காரணமாக நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்,
குளங்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராமிய வீதி கட்டமைப்பின் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் அபிவிருத்தி திட்டங்களில் எந்தப் பயனும் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் பல எதிர்பார்ப்புகளுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற தன்னால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் அங்கத்தவர்களுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக அபிவிருத்தித் திட்டங்களை வரைவது முதல் நிர்மாணப் பணிகளைக் கண்காணிப்பு செய்தல் மற்றும் நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் போன்ற அத்தனை விடயங்களும் வெளிநாட்டு பொறியியலாளர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தலைமை வகித்த செயற்திட்டங்களில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து செயற்திட்டங்களை முன்னெடுக்கும் கலாசாரத்தை நிறுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உள்நாட்டு பொறியியலாளர்களிடமும் நிறுவனங்களிடமும் தாம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த போது இளைஞர்களின் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. நிர்மாணத்துறையில் தாம் ஏற்படுத்த எதிர்பார்க்கும் புரட்சியிலும் உள்நாட்டு பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை வைக்கப்போவதாகவும், வரலாற்றில் மிகச் சிறந்த பொறியியலாளர்கள் எமது நாட்டில் உருவாகிய யுகத்தை மீண்டும் உருவாக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

தாம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாத்து உள்நாட்டு பொறிமுறையினுள் நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக பொறியியலாளர்கள் நேற்றைய தினம் உறுதி அளித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனம் மற்றும் அரச வேலைத்தளங்களின் நிலைமை தொடர்பாக தாம் கவலைப்படுவதாக குறிப்பிட்டதுடன், அந்த நிறுவனங்களை ஏற்கனவே இருந்த நிலையை விடவும் முன்னேற்றும் பொறுப்பு எமது பொறியியலாளர்களுக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் நாட்டை பொறுப்பேற்கும்போது இருந்த நிலைமையை விட, கொவிட் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள சவால் பத்து மடங்கிலும் அதிகமானது என்பதனை அவர் குறிப்பிட்டதுடன், பலமான சக்தியுடன் அதற்கு முகம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களை பெறுபவர்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும்போது உள்நாட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் பொறியியலாளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அடிப்படை கட்டமைப்பு பாதிக்கப்படாத வகையில் குளங்கள் மற்றும் நீர்ப்பாசன முறைமையை புனர்நிர்மாணம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்பது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாகும். அதற்கான அபிவிருத்தி திட்டமொன்றை நோக்கி பயனிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நாட்டை சரியான திசையில் கொண்டு செல்வதை உறுதியாக நம்புவதாக பொறியியலாளர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பல அரச, தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.