Friday, June 26, 2020

அரசாங்கம் செய்ய வேண்டியது சிறுவணிக துறையினரின் அபிவிருத்திக்கு உதவுவதாகும்-ஜனாதிபதி


அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது சிறியளவிலான வியாபாரத் துறைகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையக் கூடும் அதனால் அரசாங்கம் செய்ய வேண்டியது, வசதிகளை வழங்கி அபிவிருத்திக்கு உதவி புரிந்து, சிறு வியாபார துறையினரின் சுதந்திரமான முன்னேற்றத்திற்கு இடமளிக்க வேண்டியதே ஆகும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் அழகுக் கலை மற்றும் சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழிற்திறனை மேம்படுத்துவதும், நிதி வசதிகளை வழங்குவதும், வர்த்தக மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனேகமானவர்களின் வேண்டுகோளின் பேரில் தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியை அழகுக் கலை துறைக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

அவ்வாறு செய்வது அவர்களைக் கடப்பாடுகளுக்கு உட்படுத்துவதற்காக அன்றி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பங்களிப்பதற்காக மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

சிறிய, நடுத்தர மற்றும் பாரியளவிலான சுமார் 90, 000 அழகுக்கலை நிலையங்கள் நாட்டில் உள்ளன. நான்கரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சுமார் 15 லட்சம் குடும்பங்கள் தங்கியுள்ளன.

அழகுக்கலையை ஒரு வாழ்க்கைத் தொழிலாகச் சிறப்பாகப் பேணுவதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் நேற்றையதினம் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்தகைமைகள் பாடநெறியின் (NVQ) 05, 06 மற்றும் 07 ஆகிய கட்டங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி. பீ. ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அனுஷ்க குணசிங்க மற்றும் அழகுக்கலை, சிகையலங்கார துறை முன்னோடிகள் சிலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!