Saturday, June 20, 2020

கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள கொந்தகையில் குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி முதல் நடந்து வருகிறது.
ஏற்கனவே கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன.
கடந்த, வியாழக்கிழமை கொந்தகையில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
நேற்று, வெள்ளிக்கிழமை காலையில் நடந்த அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று முழு அளவில் கிடைத்துள்ளது. கொந்தகை ஈமக்காடாக இருந்த இடம் என்பதால் முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் அதிகளவில் கிடைத்து வருகின்றன.
பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை மூன்று வெவ்வேறு வழிமுறைகளில் புதைக்கும் வழக்கம் இருந்ததுள்ளது. பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டிப் புதைப்பது, தாழியில் வைத்துப் புதைப்பது ஆகிய வழக்கங்கள் இருந்துள்ளன. தற்போது கொந்தகையில் கிடைத்துள்ள குழந்தையின் உடல் முதல் வழிமுறையில் புதைக்கப்பட்டது எனவும் கிடைத்துள்ள குழந்தையின் எலும்புக்கூடு இருந்த பகுதியில் மணல் மிகவும் தளர்வாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொந்தகையில் கிடைத்துள்ள எலும்புக்கூட்டின் உயரம் 75 சென்டி மீட்டராக உள்ளது. ஆனால், அது ஆணா, பெண்ணா என்பது குறித்து தெரியவில்லை. பொதுவாக இடுப்பு எழும்பு 'V' வடிவத்தில் இருந்தால் அது ஆண். எலும்பு 'U' வடிவத்தில் இருந்தால் பெண். ஆனால் இந்த எலும்புக் கூட்டில் இடுப்பு எலும்புப் பகுதி சேதமாகியுள்ளதால் வடிவம் சரியாகத் தெரியவில்லை. அகழாய்வில் கிடைத்துள்ள எலும்புக்கூடு உயரம் 75 செ.மீ என்பதால் அது குழந்தையின் எலும்புக்கூடாகத்தான் இருக்கும். ஆனால், குழந்தை இறந்தபோது என்ன வயது என்பது தெரியவில்லை, என கூறப்படுகிறது. 
தற்போது கிடைத்துள்ள மனித எலும்புக்கூடானது கருப்பு கவரால் குளிக்குள் மூடி வைக்கப்பட்டு இருந்துள்ளது. நாளை அல்லது நாளை மறு நாள் குழியில் இருந்து எலும்புக்கூடு எடுக்கப்பட்டு அதில் இருந்து தேவைப்படும் எலும்புகளை மரபணு சோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறையிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


உயிரியல் துறையின் மரபணு சோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும் எனவும் கொந்தகையில் அதிக அளவு மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்து வருகின்றதாகவும் எதிர் வரும் காலங்களில் இன்னும் மக்கள் வாழ்ந்ததற்கான கூடுதல் அடையாளங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!