இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களே தற்போது அதிகளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது முற்றாக இல்லாது செய்யப்பட்டுள்ளதென சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜெயசிங்க தெரிவிக்கின்றார்.
இலங்கையின் பொது போக்குவரத்துக்கள்  வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது போக்குவரத்துக்கள் வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், பொது போக்குவரத்துக்களின் ஊடாகவே மீண்டுமொரு முறை கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் அதிக அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்று மீண்டும் ஏற்படுமாயின், அதற்கு பொது போக்குவரத்து சேவைகளே மிகவும் ஆபத்தான இடமாக காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினால், பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜெயசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.