மருதமுனை பகுதியில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளொன்றைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய நபர் கைது.ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில், பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளொன்றைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நபரொருவரை,  கல்முனை பொலிஸார், நேற்று (04) கைது செய்துள்ளனர்.

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி, அங்குள்ள இளைஞர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் சென்றுள்ளனர்.

சந்தேக நபரை, அலைபேசியூாக தொடர்புகொண்ட பொலிஸார், கஞ்சா வாங்குவதைபோல பாவனை செய்து பேரம் பேசியுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபர், இலக்க தகடு இல்லாத மோட்டார் சைக்களில், கஞ்சா மற்றும் வாள் ஒன்றுடன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் குழு, சந்தேக நபரை  மடக்கிப் பிடித்ததுடன், 300 கிராம் நிறையுடைய 75  கஞ்சா பக்கெட்டுகளுடனும் 2 அடி வாள், அலைபேசி மற்றும் கறுப்பு நிற  மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள மருதமுனை, அல்மனார் வீதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர், கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவிக்கின்றனர் .