அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸாரால் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அந்நாட்டில் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், உலகெங்கும் பல பிரபலங்கள் தங்களது துறையில் சந்தித்த இனப்பாகுபாடுகள் குறித்து வெளிப்படையாக பேசத் துவங்கியுள்ளனர்.

ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, அனைத்து மக்களையும் விளையாட்டு ஒன்றிணைக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால், அத்துறையிலும் இனம், நிறம் மற்றும் மத ரீதியான பாகுபாடு இருப்பதாகப் பல காலமாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் திசர பெரேராவையும் சிலர் 'காலு' என்று அழைத்ததாக சமூகவலைத்தளத்தில் கடந்த வார இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணிகளின் முன்னாள் கேப்டனும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரருமான டேரன் சமி குறிப்பிட்டார்.
சிலர் தன் மீது இனப்பாகுபாடு காட்டியதாக டேரன் சமி குற்றச்சாட்டி உள்ளார். இந்நிலையில், விளையாட்டுத்துறையில் உள்ள வீரர்கள் சந்தித்த இன, நிற, மத பாகுபாடு சம்பவங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1936-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியிலிருந்தபோது, ஒலிம்பிக் போட்டிகள் பெர்லினில் நடந்தன. கறுப்பினத்தைச் சேர்ந்த அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஒவன்ஸ், பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு 100 மீ, 200 மீ, 100 மீ. ரிலே ஆகிய ஓட்டப்பந்தயங்களிலும், நீளம் தாண்டுதலிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
ஒரே ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கம் வென்று அவர் சாதனை படைத்தார்.
இந்நிலையில், வெற்றிபெற்ற வீரர்களை வாழ்த்த வந்த ஹிட்லர், ஜெர்மனியை சேர்ந்த வீரர்களுக்கும், வெள்ளை இன வீரர்களுக்கு மட்டும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு ஜெஸ்ஸி ஒவன்ஸ்க்கு வாழ்த்து தெரிவிக்காமல் தவிர்த்துவிட்டார்.
யூதர்கள் மட்டுமின்றி கறுப்பினத்தவர்கள் மீதும் ஹிட்லர் பாகுபாடு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. ஹிட்லர் அனைத்து வீரர்களிடமும் கைக்குலுக்கியிருக்க வேண்டும், இல்லையெனில் யாருக்கும் குலுக்கியிருக்க கூடாது என ஒலிம்பிக் கமிட்டி அப்போது கூறியிருந்தது.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் 2007-ம் ஆண்டு இலங்கையில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்துகொண்டிருந்தார். 
போட்டியின் போது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர், ஹாசிம் ஆம்லா கேட்ச் பிடித்தார். அப்போது, வர்ணனையாளர் ஜோன்ஸ்.'' இந்த தீவிரவாதி மற்றொரு விக்கெட்டை எடுத்துவிட்டார்'' என கூறியுள்ளார்.
விளம்பர இடைவெளியின் போது ஜோன்ஸ் தெரிவித்த இந்த கருத்து, தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. இதனால் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து ஜோன்ஸ் நீக்கப்பட்டார். பின்னர் அவர் மன்னிப்பும் கோரினார்.
2015-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது, ஒரு ஆஸ்திரேலிய வீரர் தன்னை 'ஒபாமா' என அழைத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது. ஆனால், போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி விசாரணையை நிறுத்தியது.
வெள்ளை இனத்தவர்கள் அதிகம் விளையாடும் கோல்ப் விளையாட்டில், டைகர் வூட்ஸ் போன்ற வெகு சில கறுப்பினத்தவர்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கோல்ப் விளையாட்டை விளையாடுபவர்களில் 83% பேர் வெள்ளை இனத்தவர்கள் என கூறப்படுகிறது.
ஆனால், இந்த விளையாட்டைச் சிறப்பாக விளையாடி உலகின் முன்னணி கோல்ப் வீரர்களில் ஒருவர் என்ற பெருமையை டைகர் வூட்ஸ் பெற்றார். ஆனால் இனவெறியிலிருந்து இவரும் தப்பிக்கவில்லை. டைகர் வூட்ஸிடம் கோல்ப் உதவியாளராக இருந்த ஸ்வீவ் வில்லியம்ஸ் என்பவர், வூட்ஸின் நிறத்தை குறிப்பிட்டு ஒரு மோசமான கருத்தை 2011-ம் ஆண்டு கூறினார்.
இது கோல்ப் விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. தனது கருத்து இனவெறி கருத்து அல்ல என்றும், முட்டாள்தனமான கருத்து என்றும் கூறி வில்லியம்ஸ் மன்னிப்பு கோரினார்.
அதே போல் டைகர் வூட்ஸின் நிறம் குறித்து கிண்டலாகப் பேசிய தி கோல்ப் சேனல் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான அன்டிலி பிக்குவாயோ குறித்து, இன ரீதியான சொல்லை பயன்படுத்தி அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது வசைபாடியுள்ளார்.
இது குறித்த புகாரின் போது நடந்த விசாரணையில் தனது தவறை சர்ப்ராஸ் அகமது ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 4 போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
பிரிட்டன் கால்பந்து கிளப்களில் உள்ள கறுப்பின கால்பந்து வீரர்கள் நீண்ட காலமாகவே நிறப்பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
2018 முதல் 2019 வரை பிரிட்டன் கால்பந்து கிளப்களில் நிற பாகுபாடு நடப்பதாக 150க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
2019-ம் ஆண்டு பல்கேரியாவில் 2020 யுரோ கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து போட்டியில் இங்கிலாந்தும் பல்கேரியாவும் மோதின. ஆனால், இங்கிலாந்து வீரர்களுக்கு எதிரான பல்கேரிய பார்வையாளர்களின் நிறவெறி கூச்சல்களால் போட்டி இரண்டு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
2008-ல் சிட்னியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னை,'குரங்கு' என அழைத்ததாக அஸ்திரேலிய வீரர் ஆன்ரூ சைமன்ட்ஸ் குற்றஞ்சாட்டினார்.
ஹர்பஜன் சிங் இந்த குற்றச்சாட்டை மறுத்த போதிலும், மூன்று போட்டிகளில் அவர் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சமூகவலைதளவாசிகள் சிலர், இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் பழைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை எடுத்து சர்ச்சையை பெரிதாக்கி உள்ளனர்.அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் இஷாந்த் சர்மா சர்ச்சைக்குரிய அந்தச் சொல்லை மேற்கிந்திய வீரர் டேரன் சமிக்குப் எதிராகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
என்னதான் நிறம் மற்றும் இனம் குறித்த பாகுபாடுகள் விளையாட்டுகளிலிருந்தாலும், சில சமயங்களில் அவை மறைந்துபோகின்றன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எப்போது நடந்தாலும் இருநாடுகளுக்கு இடையில் போர் போல இருக்கும்.
ஆனால், 2004ல் பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் லக்ஷ்மிபதி பாலாஜிக்கு பாகிஸ்தான் பார்வையாளர்கள் யாரும் எதிர்பாராத அளவுக்கு உற்சாகம் கொடுத்தனர்.
அப்போது பாகிஸ்தானில் இம்ரான் கானை விட பாலாஜி மிகப்பிரபலமாக இருந்தார் என பந்துவீச்சாளர் நெஹ்ரா பின்னர் கூறினார். இனம், மதம், மொழி, நாட்டை கடந்து விளையாட்டு அங்கு முக்கியத்துவம் பெற்றது
1950களில் அமெரிக்காவின் எல்.ஃஎப்.எல், ஏ.ஃஎப்.எல் போன்ற கால்பந்து போட்டிகளில் கலந்துக்கொள்ள வெகு சில கறுப்பினத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. 1960களில் அவர்கள் தங்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

அதன் பின்னர் படிப்படியாகத் தகுதியின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது எல்.ஃஎப்.எல் போட்டிகளை விளையாடும் வீரர்களில் 70% பேர் கறுப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது