Tuesday, June 30, 2020

டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது ஈரான்.



ஈரான் இராணுவ தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது ஈரான்.

ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற இராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் ஈராக்கில் ஜனவரி 3ஆம் திகதி கொல்லப்பட்டார்.

சுலேமானீ கொல்லப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் மற்றும் 35 பேர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஈரான் விசாரணை அதிகாரி அலி அல்காசிமெஹர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்டெர்போலின் உதவி நாடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஈரானின் கோரிக்கையை கருத்தில் கொள்ளப் போவதில்லை என இண்டெர்போல் கூறியுள்ளது.



இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈரானுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி, “இதுவொரு பிரசார யுக்தி இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை,” என தெரிவித்துள்ளார்.ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றது.

அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சுலேமானீ கொல்லப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல் படை கூறுகிறது.சுலேமானீ மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் இரண்டு கார்களில் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து செல்லும்போது, அமெரிக்க ட்ரோனால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், "அதிபரின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசெம் சுலேமானீயை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது," என்று கூறப்பட்டுள்ளது.

"ஈரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குதல் தொடுத்தது ஈரான்.

ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா காமேனி, “இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்குக் கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது,'' என தெரிவித்திருந்தார்.ஈரானும் அமெரிக்காவும் சித்தாந்த ரீதியாக எதிரிகளாக இருந்தாலும், ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பு நடத்திய தாக்குதல், இரு நாடுகளுக்கு இடையே மறைமுக தொடர்பை ஏற்படுத்தியது.

2001ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பை அகற்ற அமெரிக்காவுக்கு இராணுவப் புலனாய்வு உதவிகளை வழங்கியது ஈரான்.மேலும், 2007ஆம் ஆண்டு, ஈராக்கின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் தங்கள் அதிகாரிகளை பாக்தாத்துக்கு அனுப்பியிருந்தன.

அப்போது ஈராக்கில் வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார் அந்நாட்டின் பிரதமர் நூரி மலிகி.

இந்த விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் காசெம் சுலேமானீ.சுலேமானீ கொல்லப்பட்டது தொடர்பாக 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்கிறார் ஈரான் விசாரணை அதிகாரி அலி.

"இதில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் அடங்குவர். இதில் முதன்மையானவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்,” என்று அவர் தெரிவிக்கிறார்.

டிரம்பின் அதிபர் பதவிக் காலம் முடிந்ததும் அவரை கைது செய்யக் கோருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஈரான் நீதித்துறை இது தொடர்பாக குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்யும். ட்ரோனை இயக்கியவர்களும் அடையாளம் காணப்படுவார்கள்,” என ஈரான் வெளியுறவு துறை துணை அமைச்சர் மோசென் பஹர்வெண்ட் கூறினார் என்கிறது இஸ்னா செய்தி முகமை.

தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரும் வரை ஈரான் ஓயாது என அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ப்ரைன் ஹூக், “ அரசியல்தன்மை வாய்ந்த இந்த விவகாரத்தில் இண்டெர்போல் தலையிடாது என்றே கருதுகிறோம்,” என்று கூறியுள்ளார்.

அரசியல் தன்மை வாய்ந்தது இது. தேச பாதுகாப்புக்கோ அல்லது சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் லயான் நகரத்தில் இயங்கிவரும் இன்டெர்போல், “ஈரானின் கோரிக்கையை கருத்தில் கொள்ளப் போவதில்லை,” என கூறியுள்ளது.

அரசியல், இராணுவம், மதம் மற்றும் இனம் சார்ந்த பிரச்சினைகளில் நாங்கள் தலையிடமாட்டோம். அது எங்கள் சட்டவிதிகளில் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!