தனது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவே தொண்டமான் என்னிடம் இறுதியாக பேசினார்- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.


மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் இறுதியாக கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாக, அமரர் தொண்டமான் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டிருந்தார். 
மேலும் அவரின் கோரிக்கைகள் அனைத்தையும் தான் நிறைவேற்றுவதாகவும் அவர் இதன் போது உறுதியொன்றை வழங்கியிருந்தார்.

பெருந்தோட்ட தமிழ் மக்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், மலையக மக்களின் வீட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவுமே தொண்டமான் தன்னிடம் இறுதியாக கோரிக்கை விடுத்ததாக பிரதமர் கூறினார்.

மேலும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக தன்னிடம் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் அமைச்சரவை ஊடாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
ஆறுமுகன் தொண்டமான் இந்தியாவினதும், தனதும் நல்ல நண்பர் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன்னிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். 

ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு தொடர்பில் தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியூடாக உரையாற்றிய போதே நரேந்திர மோதி இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
தமது நாடு தொடர்பில் போலி பிரசாரங்களை செய்து, நிதியுதவிகளை பெற்று நாடாளுமன்ற அதிகாரத்தை பாதுகாப்பதை விடுத்து, தமது பெருந்தோட்டத் தொழிலாளர்களை ரத்தம் சிந்தாமல் பார்த்து கொண்டவர் ஒரு உன்னதமான தலைவர் அமரர் தொண்டமான் என பிரதமர் தெரிவித்தார்.