Tuesday, June 30, 2020

வகுப்புக்களை மீளத் தொடங்குவது தொடர்பாக தனியார் கல்வித் துறையினர் முன்வைத்த ஆலோசனைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.



தனியார் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்பித்த தனியார் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 250 ஆக மட்டுப்படுத்துவது கடினம் என அதன் ஆசிரியர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயம் பற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி , இருவேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையுடன் அனுமதி வழங்கியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனியார் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. 


2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 தொற்று காரணமாக க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தோற்றக்கூடிய மாணவர்கள் 05 மாதங்களுக்கு மேலாக கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் இது போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்விடயங்களை பரிசீலித்து குறித்த பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகளை மாற்றியமைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராயும்படியும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் பரீட்சைக்கான திகதிகளைத் தீர்மானிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு முடியாத நிலை பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தன்னிடம் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விடயம் பற்றி ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன் பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிக்கும்போது வினாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மாணவர்களுக்கு தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான இயலுமையை பரிசீலிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

தற்போதைய கல்விச் சேவை வரி 24% ஆகும். அதனை திருத்தி அமைப்பது தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதற்கும் ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

தனியார் வகுப்பு பிரச்சாரத்திற்கான துண்டு பிரசுரங்களை சுகாதார விதிமுறைகளுக்கேற்ப விநியோகிப்பதற்கும் ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

க.பொ.த உயர் தரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஞாயிறு காலை வகுப்புகளை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொவிட் ஒழிப்பிற்கும் மற்றும் நாட்டின் அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் எமது அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களிற்கு அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் பாராட்டுக்களை தெரிவிப்பதாக தனியார் வகுப்பு ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இக்கலந்துரையாடலில் அமைச்சர் டளஸ் அலகப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, கல்வி அமைச்சின் செயலாளர் என். எச். எம். சித்ரானந்த, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத்பூஜித, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உள்ளிட்ட தனியார் வகுப்பு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!