சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

 சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாகவும் அங்கு பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 38,000 ஐ கடந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் கடுமையான சவால்களைத் தந்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வலுவான, மேம்பட்ட நாடாக சிங்கப்பூர் மீண்டும் எழும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அடுத்த சில ஆண்டுகள் மக்களுக்கு இடையூறுகளும் சிரமங்களும் இருக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், பல தொழில்துறைகள் மீள முடியாமல் போகலாம் என்றும், வேலைகள் பறிபோகக் கூடும் என்றும் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
மேலும் தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதற்குக் குறைந்தது ஓராண்டு காலமாவது ஆகக்கூடும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், சிங்கப்பூரில் உள்ள எவரும் அஞ்சவோ மனம்தளரவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
1965இல் கிடைத்த சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூர் துவண்டுவிடும் என்று பலரும் பலமுறை நினைத்ததைப் பொய்யாக்கியது சிங்கப்பூர் என பிரதமர் லீ கூறியதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மலேசியாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக ஏழு பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புது நோயாளிகளின் எண்ணிக்கை முதன்முறையாக ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. 
கடந்த மார்ச் 18ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது தொடர்ந்து,அன்றாடம் பதிவாகி வந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் இதுவே ஆகக் குறைந்ததாகவும் தெரிகிறது. 
மேலும் மலேசியாவில் இன்றும் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,329ஆக உள்ளதாக அறியமுடிகின்றது.
நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்துலக விமானச் சேவை குறித்து பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டொக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த நாடுகளுக்கு விமானச் சேவை மீண்டும் துவங்கப்படுகிறதோ, அவையெல்லாம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து எந்தளவு மீண்டுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளதாகவும் பாதிப்பு வெகுவாகக் குறைந்திருந்தால் பரிசீலிக்கலாம் என்றும் நூர் ஹிஷாம் குறிப்பிட்டிருந்தார். 
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக் கூடும் என்றும், கடந்த ஐந்தாண்டுகளாக இவ்வாறு நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மக்கள் கொரோனா வைரஸுக்காக மட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சலைத் தவிர்க்கவும் நல்ல சுகாதாரப் பழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.