பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதை மும்பை காவல்துறை உறுதிசெய்துள்ளது. எனினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள இல்லத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த நிலையில் இருப்பது குறித்த தகவலை அவரது வீட்டு பணிப்பெண் காவல்நிலையத்தில் தெரிவித்ததாக பிபிசிக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட தகவலை மும்பை காவல்துறையின் செய்தித்தொடர்பாளரான பிரானாய் அசோக் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுஷாந்தின் தற்கொலை பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்தார் சுஷாந்த். பிறகு, பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்த இவர், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிக்கத் தொடங்கினார்.
திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார். பின்னர் அவருக்கு 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.
அதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி நடன கலைஞராக இருந்தார்.
'காய் போ சே' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.
'தோனி அண்டோல்ட் ஸ்டோரி' என்னும் படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் கதாநாயகனாக நடித்த 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொலைக்காட்சி தொடர் மிகவும் பிரபலமானது.
சுஷாந்த சிங் ராஜ்புத் ஷுத் தேசி ரொமான்ஸ், பிகே, எம்.எஸ். தோனி மற்றும் கேதர்னாத் போன்ற பிரபல படங்களில் நடித்துள்ளார்.
திரை வாழ்வில் நல்ல நிலையில் இருந்த சுஷாந்த் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இல்லை.
முதலில் பவித்ர ரிஷ்தாவில் தன்னுடன் நடித்த அங்கிதா லோகாண்டேவுடன் காதலில் இருந்தார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன. சுஷாந்த் திரையுலகில் நல்ல நிலைக்கு வந்தவுடன் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட தொடங்கியதாக கூறப்பட்டது.
சில தினங்களுக்கு முன் சுஷாந்தின் முன்னாள் மேலாளரான திஷா சலியன் ஒரு கட்டடத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார். முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. பின்னர் அவர் போதையில் கீழே விழுந்தார் என செய்தி வந்தது.