Friday, June 26, 2020

அமெரிக்காவுடனான MCC மிலேனியம் ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதான ஆய்வின் இறுதி அறிக்கை மக்களிடம்...“மிலேனியம் சவால் ஒத்துழைப்பு” MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்படி குழுவின் அறிக்கையை மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தான் முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

நிபுணர் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தனியார் துறைசார் விற்பன்னர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை ஆராய்ந்து 6 மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 


கடந்த அரசாங்கம் 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் MCC உடன்படிக்கைகளில் இரண்டு கட்டங்களாகக் கைச்சாத்திட்டுள்ளது என, மேற்படி அறிக்கையைக் கையளித்த குழுவின் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 7.4 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருப்பினும், அவற்றுக்கான கணக்கு விபரங்கள் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் நேற்று குறிப்பிட்டுள்ளார். 

பகுப்பாய்வுக்குப் பொறுப்பான அரசாங்கத்தின் மைய நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் பல்துறை பகுப்பாய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கவில்லை என்பதனையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சட்ட ரீதியாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதென காணி ஆணையாளர் விளக்கியுள்ளார். 

இந்த திட்டம் ஒரு நாடாளுமன்ற சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதற்கு எதிரான ஒரு கருத்தை அல்லது முன்மொழிவை முன்வைப்பது உடன்படிக்கைக்கு எதிரானதாகும் என்றும் பேராசிரியர் குணருவன் குறிப்பிட்டுள்ளார். 

பிரதிநிதிகள் இருவர் கடிதம் ஒன்றை கொடுப்பதன் மூலம் இந்த உடன்படிக்கையின் எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றத்தைச் செய்ய முடியும். அவ்வாறு செய்யப்பட்டால், அது நாடாளுமன்றத்தின் இறைமையை மீறுகின்ற ஒரு விடயமாகும்.

சட்ட மா அதிபரால் கூட அரசாங்கத்தின் சார்பாக கருத்து தெரிவிப்பதற்கோ அல்லது நீதிமன்றத்திற்கு செல்லவோ முடியாத ஒரு பின்புலம் இதன்மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதனையும் பேராசிரியர் குணருவன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மிலேனியம் ஒத்துழைப்பு MCC உடன்படிக்கையை நடைமுறைப்படுத்திய ஏனைய நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்தும் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.


அந்த நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும் என தெரியவந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் எந்தவொரு வெளித்தரப்பினதும் தலையீடோ செல்வாக்கு அழுத்தமோ இன்றி சுயாதீனமாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்குச் சந்தர்ப்பமளித்தமை குறித்து குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் ஜனாதிபதிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். 

அனைத்து விடயங்களையும் கவனமாகச் செவிமடுத்ததன் பின்னர், அறிக்கையின் பரிந்துரைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தனது செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் ஒன்றிற்கு அமைய, 2020, ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி டி. எஸ். ஜயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயரத்ன மற்றும் பட்டைய கட்டிடக் கலைஞர் நாலக்க ஜயவீர ஆகியோர் மேற்படி குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். 

ஏற்கெனவே குழுவின் இடைக்கால அறிக்கை பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!