பொதுத் தேர்தல் நிறைவடைந்ததும் முதல் கட்டமாக வேலையற்ற பட்டதாரிகள் தொழில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி உறுதியளித்துள்ளாரென, மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும் வேட்பாளருமான ப.சந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டு.ஊடக மய்யத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களம் மூலம், கிழக்கில் பௌத்த விஹாரைகளை அரசாங்கம் அமைக்கப்போவதாகக் கூறி, சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பெரும்பான்மையான மக்கள், தமிழ்த் தேசியத்துக்கு அப்பால் அபிவிருத்தியை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொஜன பெரமுனவால் மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கமுடியும் என்பதை தமிழ் மக்கள் இன்று உணர்ந்துள்ளதாகவும் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலின்போது தான் வெற்றி பெற்றால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியிருந்தார் எனவும் அதற்கமைய, திறைசேரியில் பணத்தை ஒதுக்கி, பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியிருந்தார் எனவும் கூறியுள்ளார்.
“எனினும், தேர்தல் சட்டத்தின் கீழ், இது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.தேர் தல் நிறைவடைந்ததும் நியமனங்கள் வழங்கப்படும். அந்த உறுதிமொழியை ஜனாதிபதி எமக்கு அளித்துள்ளார்” என்றார்.