நிசர்கா புயல்


அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல் இந்தியாவின் வடக்கு மகாராஷ்டிரா - தெற்கு குஜராத் கடற்கரைப் பகுதிகளில் இன்னும் சில மணி நேரங்களில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிசர்கா பெரும்பாலும் இன்று, புதன்கிழமை, மாலை கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீற்றர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இரு வாரங்களுக்கு முன்பு கரையைக் கடந்த உம்பன் புயலால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் சுமார் 85 பேர் உயிரிழந்த நிலையில் இந்தப் புயல் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இன்று கரையைக் கடக்கிறது.
நிசர்கா புயல் கரையைக் கடப்பதையொட்டி மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருவேளை மும்பை பகுதியில் நிசர்கா இன்று கரையைக் கடந்தால், சுமார் நூறு ஆண்டுகளில் மும்பையை தாக்கும் முதல் புயலாக நிசர்கா இருக்கும் என கூறப்படுகிறது. 
இந்தியாவிலேயே அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நகரமாக உள்ள மும்பையில், நிசர்கா உண்டாக்கும் மழையால் மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் பரவலாம் என்று அஞ்சப்படுகிறது.