வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்களுக்கு இடையிலான ஹொட்லைன் வசதி உட்பட தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

தென் கொரிய நாட்டை எதிரி என வர்ணித்துள்ள வட கொரியா ,அந்த நாட்டுக்கு ஏதிரான தொடர் நடவடிக்கையின் தொடக்கம் இது என தெரிவித்துள்ளது.
வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவில் இருந்து செய்யப்படும் வழக்கமான தினசரி அழைப்புகளை இன்று முதல் வட கொரிய அரசு நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.
மேலும் வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றவர்கள் தென் கொரியாவில் இருந்து துண்டு பிரசுரங்கள் அனுப்புவதை அந்நாட்டு அரசு தடுக்கவில்லை என்றால்,அனைத்து தொடர்புகளும் நிறுத்தப்படும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இந்நிலையில் வட கொரியாவின் இந்த அறிவிப்பு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலக அளவில் கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பதற்றத்தைக் குறைக்க 2018-ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் அலுவலகத்தை அமைத்திருந்தன. 
1953-ல் கொரிய போர் முடிந்த பிறகு இரு கொரிய நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படாததால், இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது.
''வட கொரியா மற்றும் தென் கொரிய அதிகாரிகள் இடையிலான அனைத்து தொலைத் தொடர்புகளும் ஜூன் 9-ம் திகதி 12 மணி முதல் நிறுத்தப்பட்டது'' என கேசிஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ராணுவம் தொடர்பான தொடர்புகளும் நிறுத்தப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.
'தென் கொரிய அதிகாரிகளுடன் நேருக்கு நேர் அமர்ந்து, எந்த பிரச்சனை பற்றியும் விவாதிக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்'' என வட கொரியா தெரிவித்துள்ளது.
மேலும் 2018-ல் தென் கொரிய அதிபர் மற்றும் வட கொரிய தலைவர் இடையே நடந்த உச்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தங்களை மீறி, சிலர் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரங்களில் ஈடுபடுவது ஒரு விரோதமான செயல் என கிம் யோ-ஜோங் தெரிவித்திருந்தார்.