மத்திய மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாணத்தை கவனிக்குமாறு நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் ஜனாதிபதி.



மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாக தயாரிக்க வேண்டும் என்பதனையும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

கடந்த 05 வருட இறுதியில் நிறுவனத்தைப் பொறுப்பேற்ற போது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை பற்றி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த வருடத்தில் அடையவேண்டிய இலக்குகளை இந்த வருடத்திலேயே திட்டமிடுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச நிறுவனங்கள் தனியார் துறையின் புதிய நிர்மாணத்துறை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி அவர் குறிப்பிட்டதுடன்,
தனியார் துறையுடன் போட்டியிடக் கூடிய வகையில் தரத்தையும் நியமங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் உரிய முறையில் கிடைக்காத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகள் தனது கவனத்திற்கு நேற்றையதினம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அவ்விடயங்கள் குறித்து கண்டறிந்து பணத்தை அறவிடுவதற்குத் தேவையான நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரிக்குமாறும்  அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர அவர்களும் அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ. பி. எம் சந்தன உள்ளிட்ட பணிப்பார் சபை உறுப்பினர்களும்  பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.