Saturday, June 20, 2020

கடன்களைப் பெறாமல் முதலீடுகளை ஈர்த்து, இறக்குமதிகளை கட்டுப்படுத்தி உற்பத்திகளைப் பெருக்க வேண்டும் - ஜனாதிபதி



வீழ்ந்திருக்கும் எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி கடன்களைப் பெறாமல் முதலீடுகளை ஈர்த்து, இறக்குமதிகளை கட்டுப்படுத்தி உற்பத்திகளைப் பெருக்குவதே ஆகும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம்  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ விளக்கியுள்ளார்.

கொவிட் 19 நோய்த் தொற்றுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பில் உள்ள தூதுவர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.


தொற்றுத்நோய் காரணமாக தோன்றிய சுகாதார ரீதியிலான சவால்களை முறியடிக்க பொதுமக்கள் சுகாதார சேவையை உடனடியாக ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்டதனை ஜனாதிபதி, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

காவற்துறை மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புடன் சுகாதார பரிசோதகர்கள் மூலம் மிகச் சரியான முறையில் தொற்றுக்குள்ளானவர்கள் மட்டுமன்றி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களையும் அடையாளம் கண்டதுடன், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டனர் என்பது நாம் அறிந்ததே.

இலங்கையில் நோய்த்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளே காரணமாகி என அவர் கூறியுள்ளார். 


மேலும் நாடு எதிர்நோக்கியிருக்கும் அடுத்த சவால் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்பதை அவர் சுட்டிக்காட்டியதுடன்,

தற்போது பொருளாதார அபிவிருத்தி வேகம் மிக கீழ் மட்டத்தில் உள்ளதுடன் தேசிய கடன் தொகை உயர்வடைந்துள்ளதனையும் அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.

இந்த நெருக்கடியான நிலையை வெற்றிகொள்வதற்கு இறக்குமதியைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்
அவ்வாறு இருந்தாலும், இலங்கை மூடிய பொருளாதார நாடாக கருதப்பட மாட்டாது என்பதனையும் உறுதியளித்தார்.

உள்நாட்டு கைத்தொழிலை மேம்படுத்தும் அவரின் நோக்கம் பற்றி குறிப்பிட்டதுடன், பல்வேறு உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியுமென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இந்த தொழில்துறையை நவீனமயப்படுத்துவதே இலங்கையின் தற்போதைய தேவையாகும் எனவும் சேதனப் பசளை, தரமான விதைகள் மற்றும் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

உரிய களஞ்சிய வசதிகள் இல்லாததன் காரணமாக விவசாய உற்பத்திகளில் 40% அளவில் அழிவடைகின்றதாகவும், அதனால் பதப்படுத்தல் மற்றும் புதிய உற்பத்திகளை உலர வைத்தல் முறைமைகளை முன்னேற்றும் அவசியத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கடன்களை அறவிடாமல் இருப்பது, இலங்கைக்கு நன்மை பயக்கக்கூடியதாக அமையுமென்றும் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கடன்களைப் பெற்றுக்கொள்ளுதல் ஒரு மாற்றீடாக அமையாதென சுட்டிக்காட்டியதுடன், இலங்கைக்கு தற்போது தேவைப்படுவது புதிய முதலீடுகள் எனவும் தெரிவித்துள்ளார். 

சூரிய சக்தி மற்றும் காற்றின் விசையை பயன்படுத்தி உருவாக்கப்படும் மீள்புதுப்பிக்கத்தக்க எரிபொருள் செயற்திட்டம் தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் அவதானத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

நாட்டில் இளைஞர் சமுதாயத்திற்குப் புதிய தொழிநுட்பத்திற்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட கல்வி முறைமையொன்றை ஏற்படுத்தும் தனது நோக்கம் பற்றியும் அவர் விளக்கியுள்ளார்.

இணைய வழி முறைமையில் கல்விகற்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும், 
அதிகளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இலங்கையினுள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தமது சட்ட வரைபுகளை தற்போது மறுசீரமைத்துக் கொண்டிருக்கிறது என்பதனையும் அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

மேற்கூறிய செயற்பாடுகளுக்குச் சாதகமாகப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், தமது நாடுகள் மேற்குறிப்பிட்ட துறைகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய பல்வேறு முறைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடியுள்ளார்கள்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!