வோடஃபோன் - ஐடியா நிறுவனத்துடன் இணைகிறதா கூகுள் நிறுவனம்.உலக அளவில் டிஜிட்டல் விளம்பரத் துறையில் கூகுளுக்கு போட்டியாக இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சமீபத்தில் முதலீடு செய்துள்ள நிலையில், அதேபோன்று இன்னொரு கூட்டு உருவாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஜியோவின் போட்டி நிறுவனமான வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை வாங்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இதனால் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் வெள்ளியன்று 31 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது என .என். செய்தி முகமை தெரிவிக்கிறது.
எனினும், ஊடகங்களில் வெளியாகியுள்ளது போலான திட்டம் எதையும் தங்கள் நிறுவனம் பரிசீலிக்கவில்லை என்றும் பங்குகளை கைமாற்றினால், பட்டியலிடப்பட்ட நிறுவனம் எனும் வகையில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) தங்கள் நிறுவனம் தெரியப்படுத்தும் என்றும் வோடஃபோன்-ஐடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள், வோடஃபோன் - ஐடியா என ஒரே நிறுவனமாக இணைந்தபின் ஏர்டெல் நிறுவனத்தை வீழ்த்தி வாடிக்கையாளர் எண்ணிக்கையில் இந்திய அளவில் முதலிடத்திற்கு வந்தது. ஆனால், மூன்றாம் இடத்தில் இருந்த ஜியோ விரைவாக முதலிடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மூதலீடு செய்ய விரும்புகிறது என்றும் , இதனால் வோடஃபோன் -ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவெடுத்துள்ளது என்றும் கடந்த வெள்ளியன்று செய்திகள் வெளியாகின.
வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ஏற்கனவே பெரும் நிதி சுமையில் தவித்து வருகிறது. மேலும் அந்நிறுவனம் இந்திய அரசிற்கு செலுத்த வேண்டிய அலைக்கற்றை பயன்பாடு மற்றும் உரிமை கட்டணமாக 54,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
இந்தியாவில் ஜியோவின் வளர்ச்சிக்கு பிறகு பிற அலைபேசி நிறுவனங்கள் பெருத்த அடியை சந்தித்தன. ஒரு கட்டத்தில் வோடஃபோன்-ஐடியா நிறுவனம் இந்தியாவைவிட்டு வெளியேறி விடுமா என்ற பேச்சுக்களும்கூட எழுந்தன.
இந்நிலையில்தான் இந்த முதலீடு குறித்த செய்து வெளிவந்துள்ளது. இது வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு நிச்சியம் பலனை அளிக்கும் என்றும் கூறப்பட்டது.
வோடஃபோன்-ஐடியா இதை மறுத்துள்ளது இப்போது இந்த சந்தை கணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.