அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தையும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இறுதிக் கிரியை ஊர்வலத்தையும் ஒப்பிட வேண்டாம் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக  நடைபெற்ற போராட்டத்தையும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தையும் தொடர்புப்படுத்த முடியாதெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராட்டங்களில் ஈடுபடுவது பொறுப்பற்றச் செயல் எனவும் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, பிசிஆர் பரிசோதனைகளைப் புறக்கணித்து நாட்டுக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரிக்கு எதிராக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.
அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக முன்னிலை சோசலிசக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது தவறெனவும் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராட்டங்களில் ஈடுபடுவது பொறுப்பற்ற செயல் எனவும் தெரிவித்தார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லை எனவும் கூறிய அவர், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன என்றார்.