அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க லங்காராம விகாராதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரர் ஜனாதிபதியை நேற்று வாழ்த்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி அவர்களின் வாழ்க்கையிலிருந்து பௌத்த மதத்தின் மும்மணிகளுக்கு அவர் கௌரவமளிக்கும் விதத்தையும் மேலும் பல தர்ம விடயங்களையும் ஏனையோர் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் எனவும் தம்மஜோதி தேரர் பாராட்டியுள்ளார்.
கடந்து சில மாதங்களாக சரியான திசையில் நாட்டை அவர் வழிநடத்தி செல்கின்ற முறையானது மகாசங்கத்தினர் மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித் பாராயணம் செய்து நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் ஜனாதிபதியை ஆசிர்வதித்த தம்மஜோதி தேரர், நினைவுச் சின்னமொன்றையும் அவருக்கு வழங்கியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி அவர்கள் விகாரைக்கு சென்றிருந்த போது அங்கு வருகை தந்திருந்த மக்களும் அவரது பிறந்தநாளிற்காக தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அநுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க இசுறுமுனிய விகாரைக்கு சென்றிருந்த அவர் அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய மதவ ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
மேலும் விகாரையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக கேட்டறிந்துகொண்டதுடன், அங்கிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நூதனசாலை,குளம் மற்றும் புனித இடங்களையும் தரிசித்துள்ளார்.
அங்குள்ள, விருந்தினரின் நினைவு பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டதுடன், விகாரை பற்றிய வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை உள்ளடக்கிய பல நூல்களையும் விகாராதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் இசுறுமுனிய ரஜமகா விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களும் அவரை வாழ்த்தி வாழ்த்துச் செய்தியையும் கூறியிருந்தனர்.