'தலைவன் இருக்கின்றான்' நேரலை கலந்துரையாடலில் கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான்.


சில நாட்களுக்கு முன்பு இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள். அப்போது விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.
அந்த உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. அதே போன்று நேற்று நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசனும், ரஹ்மானும் அவர்களுடைய பார்வையில் பதிலளித்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி உங்களுக்காக இங்கே. 
ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை என கூறியிருந்தார் நடிகர் கமல்.
மேலும் அவர் பேசுகையில் 'தலைவன் இருக்கின்றான்' படத்திலுள்ள பாடல்கள் மிகச்சிறந்த பாடல்களாக இருக்கும். ஓர் இயக்குநராக ரஹ்மானுடன் வேலை செய்வது மிகவும் சுலபம்.
ஹேராம் படம் எடுத்த போது சினிமாகாரர்கள் எல்லோரும் ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டாங்க. இப்படி ஒரு சினிமா, பணம் வந்ததும் நான் எடுப்பேன்னு என் நண்பர்கள்கிட்ட சொல்லியிருந்தேன். என் ஆசை இதுதான். அதனாலதான் ஹேராம் எடுத்தேன் என்றார். 
மேலும் ரஹ்மான் வீட்டில் அவர் பயன்படுத்திய பழைய கருவிகள் எல்லாம் அவருடைய வீட்டு சுவற்றில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நமக்கு ஏன் இப்படி தோணவில்லை என எனக்குத் தோன்றியது என கூறினார். 
மேலும் பல பரிமாணங்கள் இல்லாதவர்கள் நிச்சயம் கலைஞர்களாக இருக்க முடியாது. ரஹ்மான் பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவரிடம் ஒரு விதமான அமைதி இருக்கும். சிலர் சின்ன வயசுலேயே அட்வைஸ் சொல்ற அளவிற்கு இருப்பாங்க. அப்படிப்பட்டவர்தான் ரஹ்மான்.
ஆண், பெண் சமம் எல்லாம் இருக்கட்டும். ஆனால், நம்மால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.
அது பெண்களால் மட்டுமே சாத்தியம். அம்மாக்கள் எல்லா விஷயமும் தெரிந்தவர்களாக இருந்தாலும் குழந்தைகள் சொல்லும்போது அதை புதியதாக கேட்பது போலத்தான் கேட்பார்கள். ஒரு கதையை அம்மாவிடம் கூறினால் இந்தக் கதாபாத்திரம் ஏன் இப்படி இருக்கிறது எனக் கேட்டு ஒரு கேள்வியால் ஒட்டுமொத்த கதையையே மாற்றி புதிய கதையாக்கி விடுவார்கள்.
வந்தே மாதரம் பாடலைப் போன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாட வேண்டும் என ஓராண்டுக்கு முன்பே ஏ.ஆர் ரஹ்மானிடம் சொல்லிவிட்டேன். யானைக்கு அன்னாசிப்பழம் கொடுத்தது போல ஆகிவிடக் கூடாது. எதையுமே வலியுறுத்தக் கூடாது. எனக்குத் தோன்றியது போன்று அவருக்கும் தோன்ற வேண்டும் என்றார். 
அவரைத்தொடர்ந்து பேசிய ரஹ்மான் , பத்து வருஷம் கழிச்சுஆரம்பிக்க வேண்டியதெல்லாம் அப்பா இறந்த காரணத்தினால் எனக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிடுச்சு. பல இடங்களில் வாசிக்க ஆரம்பித்தேன். மணிரத்னம் வந்த போது எல்லாமே நடந்தது. 'படைப்பு சமரசம்' என்பது நிச்சயம் இருக்க வேண்டும்.
கமல்ஹாசனும், நானும் பத்து நாட்கள் சந்தித்திருப்போம். சினிமாத்துறை சார்ந்த பல பிரபலங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களை கலந்துரையாடியிருக்கிறோம்.
ஆண்களும், பெண்களும் சமமானவர்கள். சமமான மரியாதை கொடுக்க வேண்டும். பெண்கள் ஆளைப் பார்த்தே அவர்கள் எப்படி என சொல்லிவிடுவார்கள்.
பயணம் மேற்கொள்ளாமல் வாழ்க்கையை உணரவே முடியாது. ஒவ்வொருத்தருடைய பார்வையும் வேறு. நான் உலகத்தைப் பார்க்கிற பார்வையும் வேறு.
தற்போது அமெரிக்காவில் என்ன நடக்கிறது? அடக்குமுறை நடந்து கொண்டிருக்கிறது. 300 வருடமாக எவ்வளவு போராடினாலும் அது மறுபடியும் வேறு மாதிரியாக வந்து கொண்டிருக்கிறது.
பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. இவ்வளவு முன்னோக்கி வளர்ந்த நாடு மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே செல்லும்போது இந்த மாதிரி விஷயங்கள் தான் தூண்டுதலாக இருந்தது.
ஒரு கதை எழுதலாம். கதையினால் மனிதத்தை தொட வேண்டும். அட்வைஸ் பண்ணாமல் கதாபாத்திரங்கள் மூலமாக உணர வைக்க முடியும். அதுதான் என்னுடைய குறிக்கோள்.
பிடித்த ஹீரோக்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகளை பின்தொடர்வது தவறில்லை. ஆனால், உங்களுக்கென ஒரு குடும்பம் இருப்பதை மறந்துவிடக் கூடாது. உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என பேசியிருந்தார்.