Monday, June 29, 2020

இன்று இலங்கை பல்கலைக்கழகங்களில் 1500 மேற்பட்ட மலையக மாணவர்கள் உள்வாரியாக கல்வி கற்கின்றனர்...


  நன்றி  
  சி.அருள்நேசன் (கிழக்கு பல்கலைகழகம்)மலையகத்திற்கான தனிப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டுமென இருதாசப்தத்திற்கு மேலாக மலையகம் சார்ந்த கல்வியியலாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்தபோதிலும் இதுவரையில் கைகூடாத நிலையும் கடந்த ஆண்டுகளில் இதற்கான சமிக்ஞை தென்பட்ட அதேவேளை முறையான குழுவினர்களின் கூடி கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் பல்வேறு தரப்பினர் மத்தியில் பச்சைக்கொடி காட்டப்பட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும் நடைமுறையில் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்காத நிலையே காணப்படுகின்றன. 

எனினும் அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வில் பிரதமர் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் உயர்க்கல்வி அமைச்சர் ஆகியோர் இ.தொ.க. தலைவரின் மறைவின் ஒருவருட நிறைவுக்கு முன்னர் மலையகத்திற்கான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என வெளியிட்ட கருத்துக்கள் மகிச்சிக்குரியதாகும்.

‘சலனங்களற்ற நீர் ஒருபோதும் கடலையடைவதில்லை’ எனக்கூறப்படும். அதுபோன்றே, காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களை அடைந்து கொள்ளமுடியாத ஒரு வளர்ச்சியை அடையமாட்டது எனலாம். ஒரு சமூகம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், காலத்திற்காலம் அதில் வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்கள் ஏற்படுவது இன்றியமையாததாகும். 

அப்படியெனில், ஒரு சமூகத்தில் இவ்வித மாற்றங்களை ஏற்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகின்றது. அச்சமூகத்திலிருந்து உருவாகும் தொலைநோக்குள்ள அரசியல் தலைவர்கள், ஆற்றல்மிகு அறிவியலாளர்கள், சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், திறமைமிக்க வியாபார முக்கியஸ்தர்கள், துறைசார் நிபுணர்களே இவ்வித மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

1942இல் முதலாவது இலங்கைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களும் தேசிய பல்கலைக்கழகங்களாகவே கருதப்பட்டு வருகின்றன.

பிராந்தியங்களிலும் (றுகுணு, யாழ், கிழக்கு, தென்கிழக்கு), மாகாண ரீதியாகவும் (வயம்ம, சப்ரகமுவ, ஊவா,ரஜரட்டை) போன்ற பல்கலைக்கழகளும் தேசிய பல்கலைக்கழகங்களாகவே கருதப்படுகின்றன. எனவே கால ஓட்டத்தின் நடைமுறைத்தேவைகள், இனப்பிரச்சினை தீவிரமடைந்ததன் காரணமாகவும் இந்த தேசிய அந்தஸ்து குன்றி பல பல்கலைக்கழகங்கள் அவ்வப் பிராந்திய மக்களுக்கே முதன்மை வாய்ப்பை வழங்கும் பல்கலைக்கழகளாக மாற்றமடைந்துள்ளன. 

ஒரு தேசிய பல்கலைக்கழகம் முன்நிபந்தனையாகச் சகல இனப்பிரிவினருக்கும் இடமளிக்க வேண்டுமென்றால் நடைமுறையில் சில பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட இனத்தவருக்கே விசேடமாக உள்ளவையாக வளர்ச்சிப்பெற்று வருகின்றன.

தேசியபாணியில் தொடங்கிய இலங்கைப் பல்கலைக்கழக அமைப்புக்குள் அடங்கும் பல்கலைக்கழகங்கள் அந்தப் பாணியை இழந்து வந்துள்ளன என்பது அடிப்படையானவாதம். யுதார்த்த அடிப்படையில் இன்று பல்கலைக்கழகங்களாகவும் மற்றயவை பிராந்திய ரீதியான பல்கலைக்கழங்களாகவும் ஒரு குறிப்பிட்ட இனப்பிரிவினருக்குரிய பல்கலைக்கழகங்களாகவும் உருவாக்கம் பெற்றுள்ளன. ஆனால் இவை இவ்வாறுதான் உருவாக்கம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரச கொள்கைகள் எதுவுமில்லை.

இப்புலத்தில் இன்று இல்லாதது மலையக மக்களுக்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றுதான் என்பதே எமதுவாதம். முலையக மக்கள் தவிர்ந்த ஏனைய பிரிவினருக்கென்றே கல்வி வாய்ப்பளிக்கும் பல்கலைக்கழகங்களை இன்று இனங்காண முடிந்த நிலையில் ‘மலையகப் பல்கலைக்கழகம்’ பற்றிய கோரிக்கையில் கொள்கையளவில் எவ்வித தடையும் தவறும் இல்லை. ஒரு சமூகத்தை வளப்படுத்துவதில் பல்கலைக்கழகத்தின் பங்கு அளப்பரியது. 

குறித்த சமூகத்தினுடைய அரசியல், பொருளாதார, சமூக, உளவியல், ஆன்மீகம் ஆகிய விடயங்களை வளப்படுத்துவதில் அதன் பொறுப்பு மிகவும் முக்கியமானது. ஒரு சமூகத்தின் மூளை என்பதே பல்கலைக்கழகம் தான். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் ஒரு கட்டத்தில் வடகிழக்கு தமிழ் சமூகத்தின் கல்வி மையமாகவே திகழ்ந்தது. அந்த சமூகத்தின் அரசியல் நியாயப்பாடுகளை வெளிக்கொண்டு வந்ததும் யாழ்ப்பல்கலைக்கழகம் தான் என்பது முக்கியமானதாகும்.

மலையக உயர்கல்வித் துறையில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியும் வளர்ச்சிப்படி என்றாலும் இந்த சமூகத்தின் எதிர்ப்பார்பை அது பூர்த்தி செய்ய போதுமானதல்ல. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாணவர்கள் பல்கலைக்கழங்களில் குறைவாகவே இருக்கின்றனர். குறிப்பாக 500 உட்பட்டவர்களே, இவர்களுக்கு தனிப்பல்கலைக்கழகம் என்பது சாத்தியமற்றது என்ற ஒரு சில அரசியல்வாதிகளின் கருத்துக்கள் வேடிக்கையளிப்பதாக குறித்த கல்விசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். 

எனவே அதற்கமைய அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி இன்று பல்கலைக்கழங்களில் உள்வாரியாக 1500 மேற்பட்ட மாணவர்களும், பட்டப்பின் படிப்புக்களை தொடரும் மாணவர்கள் 250 வெளிவாரியாக 500 மேற்பட்டவர்கள் கல்விக்கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதுவே எமது சமூகத்தின் கல்வியை பிரதிபலிப்பதோடு, தனியான பல்கலைக்கழகம் உருவாக்கம் பெறுவதற்கு சாதகமான சூழ்நிலையை வெளிக்காட்டுகின்றது.

எனினும் குறித்த மாணவர்கள் பட்டப்படிப்பினை மேற்கொண்டபோதிலும் சமூகம் சார்ந்த ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்வதற்கு உள்ள வாய்ப்புக்கள் அல்லது அது குறித்து இந்த மாணவர்கள் காட்டும் ஆர்வம் மிகவும் அரிதாகவே உள்ளது. இந்த பின்னணியில்தான் மலையகத்திற்கான பல்கலைக்கழகத்தின் தேவை மிகவும் அவசியமாக உள்ளது. அந்தப்பல்கலைக்கழகமானது மலையக தமிழ் சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு அறிவுப்பாய்ச்சலை ஏற்படுத்தும்.


பல்கலைக்கழகத்தின் பெயர்
மாணவர்களின் எண்ணிக்கை
கிழக்குப் பல்கலைக்கழகம்
650
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
440
திறந்தப் பல்கலைக்கழகம்
150
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
100
பேராதனைப் பல்கலைக்கழகம்
75
கொழும்புப் பல்கலைக்கழகம்
60
வயம்ப பல்கலைக்கழகம்
25
ஊவா பல்கலைக்கழகம்
20
ரஜரட்ட பல்கலைக்கழகம்
20
சப்ரகமுவ பல்கலைக்கழகம்
20
மொறட்டுவ பல்கலைக்கழகம்
18
களனிப் பல்கலைக்கழகம்
15
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
12
றுகுணு பல்கலைக்கழகம்
12
கட்புல, அழகியல் கலைகள் பல்கலைக்கழகம்
10
இதர பல்கலைக்கழகங்கள்(வெளிவாரி)
250

-2019 கிழக்குப்பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றிய அறிக்கை-

பொதுவாக மலையத்தைச் சார்ந்தவர்கள் தலைநகரத்துக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் மிகவும் தொலைவில் மலைபாங்கப்பான பிரதேசங்களிலே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். இதில் பொருளாதார ரீதியான பிரச்சினைகள், வறுமை, முறையான போக்குவரத்து இன்மை,உழைப்புக்கேற்ற ஊதியம்,கல்விக்கற்ற சமூகத்தின் வருகை என்பது குறைவாகவே காணப்படுகின்றது

இந்தவகையில் பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் மாணவர்களில் அதிஉயர்சித்தி பெற்றவர்களை பேராதனை மற்றும் கொழும்பு பகுதிசார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பிட்டளவு மாணவர்களை உள்வாங்குகின்ற போதும் ஏனைய அனைத்து துறைசார்ந்த மாணவர்களும் தூர மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு (கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ் பல்கலைக்கழகம், தென்கிழக்கு, றுகுணு, வயம்ப) தெரிவுசெய்யப்படுகின்றனர். 

பல்கலைக்கழக நுழைவு என்பது எம்மவர்களுக்கு வரமாக இருக்கின்றபோதிலும் பட்டப்படிப்பை தொடரும் காலப்பகுதியில் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லண்ண துயரமாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் எமது பிரதேசம் சார்ந்த பல்கலைக்கழகம் இருக்கக்கூடாத என்று ஏங்கியக் காலங்கள் அதிகமும்கூட.

 இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழங்களில் உள்ள மலையகம் சார்ந்த மாணவர்களும் பொருளாதார ரீதியாக கஸ்டத்தை அனுபவிப்பதோடு, உதவிப்பணம், புலப்பரிசில்களை எதிர்ப்பார்த்தும், பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 

 வீடுகளுக்குச் செல்வதற்குகூட யோசிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மாதாந்த கொடுப்பணவை நம்பியும், தோட்டத்தொழிலாளர்களாகிய பெற்றோரின் பணத்தை எதிர்பார்த்து காலத்தை கழிக்கும் மாணவர்களும் இதில் அடங்குவர். இதே குறித்த பிரதேசத்தை மையப்படுத்திய மாணவர்கள் தமது வதிவிடத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் குறுகிய தூர இடவெளிகளை கொண்டிருப்பதனால் எவ்வித பாரச்சுமைகளும் இல்லாத சுமூகமான கல்விநிலையை கொண்டவர்களாகவே இருந்துவருகின்றனர்.

 கல்வித்துறையில் விசேடமாக உயர்க்கல்வித் துறையில் பின்தங்கியுள்ள மலையக மக்களுக்கு அவர்களுடைய அடையாளத்துடன் கூடிய பல்கலைக்கழகமொன்றறை வழங்குவதன் மூலமே அவர்களுடைய உயர் கல்வி வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும் என்பது எமது கருத்தாகும். இப்பல்கலைக்கழகம் அம்மக்கள்  மத்தியில் உயர்கல்வி பற்றிய ஒரு புதிய விழிப்புணர்வை மட்டுமன்றி, உயர்க்கல்விக்கான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கும்.

 இச்சமூகத்தைச் சேர்ந்த தகுதிபெற்ற மாணவர்களுக்கான விசேட அனுமதிக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். மேலும் இன்றைய பல்கலைக்கழகங்கள் தனித்து .பொ..உயர்தரம் சித்தி பெற்ற பட்டதாரி மாணவர்களைக் கொண்டதாக மட்டுமன்றி ஏராளமான விரிவாக்கக் கற்கை நெறிகளையும் நடாத்துகின்றன. கணினி, ஆங்கிலம், பத்திரிகையியல், முகாமைத்துவம் போன்ற துறைகளைப் பயில ஏராளமான வெளிமாணவர்கள் வார இறுதியில் பல்கலைக்கழகங்களை நாடுகின்றனர். இவ்வாறான கற்கை நெறிகளை அறிமுகம் செய்து, பல்கலைக்கழக கல்வியை தவறவிட்ட ஏராளமான இளைஞர்களுக்கும் மலையகத்தில் உயர்தரம் சார்ந்த நியமனங்கள் குறைவதற்கும் மலையகப் பல்கலைக்கழகம் உயர்கல்வி பயில ஒரு இரண்டாம் வாய்ப்பினை வழங்கலாம்

அத்துடன் பட்டப்படிப்புக்கு வெளிவாரியாக மாணவர்களாக மலையக இளைஞர்களைப் பதிவு செய்து, அவர்களுக்கான வகுப்புக்களை நடத்தவும் கற்க உதவவும் எதுவிதத் தடையுமில்லை. பல பல்கலைக்கழகங்கள் தமது பிரதேச வளர்ச்சிக்கருதி ஏற்கனவே இவ்வாறான நடவடிக்கைகளைச் செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். -ம் அதிக பட்டதாரிகளைக் கொண்ட மாவட்டம் அம்பாறை.

 ஆகவே புதிய பல்கலைக்கழகமானது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆராய்ச்சியில் ஈடுபடுதல் என்பவற்றோடு நின்றுவிடாது தன்னைச்சுற்றி இருக்கும் சமூகத்துடன் தொடர்பாடலையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அதாவது, பல்கலைக்கழகத்துக்கு வெளியேயுள்ள அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அச்சமூகம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள், அவற்றிற்கு சாத்தியமான தீர்வுகள் என்பன பற்றிய தனது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். எவ்வாறு இருந்போதிலும் அடிப்படையில் இன்று முதலே இடைநிலைப்பாடசாலைக் கல்வியை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும். 

இதனூடாகவே எதிர்காலத்தில் மலையகத்திற்கான பல்கலைக்கழகம் முழுமையான பல்கலைக்கழக தரத்தினைப் பேண முடியும். எனவே, மேலும் தாமதிக்காது இவ்வித பல்கலைக்கழகமொன்றினை மலையகப் பிரதேசத்தில் உருவாக்குவது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். இப்பல்கலைக்கழகத்தினை அரசியல் காய்நகர்த்தலாகவும், பேசு பொருளாகவும் மாற்றாமல் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த மலையக பிரதிநிதிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்

அதேபோன்று மலையக சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி, கலாசார மேம்பாட்டில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட அனைவரும் இதற்கு தமது பூரண ஆதரவையும் விரைவுபடுத்தலையும் ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!