Tuesday, June 16, 2020

துணி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் ஏகபோகம் நீக்கப்பட்டு அனைத்து ஆர்வலருக்கும் அது திறக்கப்பட வேண்டும்-ஜனாதிபதி



துணிகள் மற்றும் ஆடை தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இந்த துறைக்குள் ஈர்ப்பதற்கும் துணி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் ஏகபோகம் நீக்கப்பட்டு அனைத்து ஆர்வலருக்கும் அது திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
 துணிகள் மற்றும் ஆடைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இறக்குமதி துணிகளைப் பயன்படுத்தி உற்பத்திசெய்யப்படும் ஆடைகளுக்குப் பதிலாக சுதேச துணி உற்பத்தி சார்ந்த ஆடைகளுக்கு அதிக சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக நேற்று  விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 இதன் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெருமளவு அந்நியச் செலாவணியை மீதப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.
 பாடசாலைகள் மற்றும் பல்வேறு தொழிற்துறையினருக்கான சீருடைகளுக்காக மேற்கொள்ளப்படும் துணி உற்பத்தியின் தரம் உச்சமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி , அதற்காகக் கண்காணிப்பு குழு ஒன்றையும்  ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சிலரின் கைகளில் ஏகபோகம் போல உள்ள துணி உற்பத்திச் சந்தையை, அந்த துறையில் ஆர்வம் காட்டும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் திறந்துவிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 ஆடை உற்பத்தியாளர்களும் சுதேச வர்த்தக நிறுவனங்களும் ஒன்றுகூடித் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் விரிந்த சந்தையொன்றை உருவாக்க வேண்டும் என்றும்,
 ஏனைய நாடுகளின் கொள்வனவாளர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்வதற்கு ஏற்ற வர்த்தக மத்திய நிலையமொன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் பற்றியும் நேற்றைய கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நூல் மற்றும் இரசாயண நிறச்சாயங்களின் தரம், மற்றும் விலையுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் நேற்று விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே. . ரஞ்சித், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல மற்றும் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தித் துறை வர்த்தகர்கள் சிலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!