Wednesday, June 17, 2020

மத்திய வங்கியை கொள்ளையிட ஒத்துழைத்த உங்களால், நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைக்க ஏன் முடியாமல் உள்ளது...? - ஜனாதிபதிஇலங்கை மத்திய வங்கி அதிகாரிகள், பணிப்பாளர் வாரியத்தினர் மற்றும் ஆளுநரிடம்  நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்த சில கருத்துக்கள் உங்களுக்காக


 நாம் எதிர்கொண்ட சுகாதாரப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாக மாறுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. பெரிய நாடுகள் மட்டுமன்றி சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள்கூட அதற்காகப் பாரிய நடவடிக்கைகளை எடுக்கின்றன.


 அமெரிக்காவின் பெடரல் வங்கி (மத்திய வங்கி) 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த வேலைத்திட்டத்திற்கு வழங்குகின்றது. அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் இன்று அறிவிக்க உள்ளன. அதேபோன்று எம்மை சுற்றியுள்ள சிறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கின்றன.


 சூழல் மற்றும் அபிவிருத்திக்கான அரபு மன்றம் (AFED) முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காக அனைத்து வழிமுறைளையும் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

 

 நாம் என்ன வழிமுறைக் கருவியைப் பயன்படுத்தியுள்ளோம்? ஒன்றுமே இல்லை. இதற்காக எமது மத்திய வங்கி எதையுமே செய்யவில்லை. மத்திய வங்கியும் திறைசேரியும் தான் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கையைத் தயாரிக்கும் பொறுப்பில் உள்ளனர்.


 ஆனால் அது நாட்டின் ஜனாதிபதியினது பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட வேண்டும். உங்களிடம் இதற்கென பல்வேறு வழிமுறைக் கருவிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டும். எனினும் எமது மத்திய வங்கி அவ்வாறான எந்தவொரு கருவியையும் பயன்படுத்துவது இல்லை. அவர்கள் இயக்கமற்று நித்திரையில் இருக்கிறார்கள் என அவர் கூறினார்.

 

 மேலும் முன்னர் இடம்பெற்ற தவறுகளின் காரணமாகப் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் பெருந்தொகை பணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, அந்த நிதியை ஒரு பிணையாக வைத்துக்கொண்டு வங்கிகளிலிருந்து அவர்கள் கடன் பெறுவதற்கு இடமளியுங்கள் என்றும், அதற்கு ஏதுவாக  150 பில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு வழங்குமாறும் அவர் கூறினார்.


 அப்போதுதான் அவர்களால் பொருளாதாரத்தைக் முன்கொண்டு நடத்த முடியும். பணச்சுழற்சி என்பது இதுதான். இது மிகவும் இலகுவானது. இதுதான் பொருளாதாரத்தின் அடிப்படை. எனினும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பொருளாதார இயக்கம் நிறுத்தமுற்று இருப்பது வர்த்தகத்துறையின் பிழையினால் அல்ல உங்களது தவறுகள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன நீங்கள் இவ்வாறான விடயங்களைப் பார்ப்பதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்


 மேலும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு நடந்துள்ள நிலைமையினைப் பாருங்கள். இந்த நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டியதும் முகாமைத்துவம் செய்வதும் உங்களுடைய பொறுப்பு அல்லவா? ஆனால், நீங்கள் அதனைச் செய்வதும் இல்லை. வாகனங்களுக்கான குத்தகைக் கடன் வழங்கும் நிறுவனங்களைப் பற்றி நீங்கள் பார்ப்பதும் இல்லை. .ரி.-க்கு என்ன நடந்தது? இவற்றை நீங்கள் பிழையாக செய்வதன் காரணமாக இறுதியில் மக்களால் பணத்தைச் செலுத்த முடியாதுள்ளது. பினான்ஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அது எமக்கு தெரியாது. இப்போது அதற்கு எப்படி பணம் செலுத்துவது. அவற்றை நீங்கள் முகாமைத்துவம் செய்வதும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்


 இன்று இங்கே வந்திருக்கின்ற நீங்கள் அனைவருமே பொருளாதார நிபுணர்கள். இலட்சக் கணக்கில் சம்பளம் பெறுகின்றீர்கள். என்ன செய்கின்றீர்கள்? உங்களுக்கென்று ஒரு பொறுப்பு உள்ளது. உங்களுக்கு நான் ஒரு பொறிமுறையை வழங்கியிருக்கின்றேன். அதனை உங்களால் செய்ய முடியாதென்றால் நாளை காலை ஆகும் போது எனக்கு ஒரு பொறிமுறையை சமர்ப்பிக்க உங்களால் முடியும். அதனைச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.


 ஏனைய நாடுகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். இங்கு என்ன செய்யப்படுகின்றது?


 என்னுடைய கடமைகளைச் செய்யவிடாமல் நீங்கள் என்னை கஷ்டத்திற்கு உள்ளாக்கப் பார்க்கிறீர்கள். அரசாங்கத்தையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்க பார்க்கின்றீர்கள். நீங்கள் உங்களது கடமைகளைச் சரிவரச் செய்வீர்களானால் நான் இவ்வாறு பேச வேண்டிய தேவையில்லை என கூறியுள்ளார்


 ஐனாதிபதியாக நான் பொறுப்பை ஏற்று எட்டு மாதங்கள் ஆகின்றன. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புங்கள் என்று அன்றுதொட்டே உங்களுடம் நான் வேண்டுகின்றேன்.


 கடந்த அரசாங்கத்தின் தவறுகளைப்பற்றி கதைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். அன்று நடந்த பிணை முறி மோசடி கொள்ளையின்போதும் நீங்கள் மத்திய வங்கியில் இருந்தீர்கள். அவற்றைச் செய்வதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்களால், ஏன் நான் எதிர்பார்க்கும் நியாயமான விடயத்துக்காக ஒத்துழைப்பு வழங்க முடியாதுள்ளது என்பதற்கு எந்த காரணமும் எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்


 இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எனக்கு மக்கள் மிகப்பெரும் ஆணையையும் அதிகாரத்தையும் தந்துள்ளார்கள். நான் கேட்பது அதனைச் செய்து முடிப்பதற்கு இடமளிக்குமாறும் அந்த முயற்சிக்கு ஒத்துழைக்குமாறும் மாத்திரமே ஆகும் என கூறியுள்ளார்.

 

 கொரோனா வந்தது. அது இன்று முழு உலகிலும் இதுவரை இல்லாத பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார திணைக்களம், இராணுவம், புலனாய்வுத்துறை, காவற்துறை போன்ற நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனால்தான் உலகின் ஏனைய பல நாடுகளை விட முதலாவதாக இந்த நாட்டை கொரோனா தாக்கத்திலிருந்து விடுவிக்க எமக்கு இயலுமாக இருந்தது. எமது நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு, நாம் சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாக மாறுவதற்கு முன்னர் அதனை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அது உங்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 தற்போது அதனை அடைய எனக்கு உதவி செய்யுங்கள். நான் கூறும் முறைமைகள் சரியானவை இல்லையென்றால், என்ன மூலோபாயத்தையும் முறைமைகளையும் நீங்கள் முன்வைக்கிறீர்கள் என்பதனை எனக்குச் சொல்லுங்கள் என்றார்


 இவ்வாறான ஒரு நெருக்கடிச் சந்தர்ப்பத்தில், இந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் இருக்கும் மத்திய வங்கியில் இருக்கும் உங்களது கடமையல்லவா இது?


 இந்த நிலைமையில் இருந்து முன்னேறுவதற்கு அவசியமான முறைமையொன்றை முன்வைக்க வேண்டியது நீங்கள் அல்லவா?


 நீங்கள் எதனை முன்வைத்திருக்கிறீர்கள்? எதனைச் செய்ய சொல்கிறீர்கள்? என்ன ஆலோசனைகளை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்? எதுவுமே இல்லை. இவற்றை பார்த்து நான் சிந்தித்தேன்.. நான் கூறுபவைகளை செய்து ஒத்துழைக்க நீங்கள் எவரும் முன்வருவதில்லை.


 உங்களுக்கு ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்: தயவுசெய்து நான் கூறுபவைகளை நடைமுறைப்படுத்துங்கள், இல்லையென்றால், உங்கள் பரிந்துரைகள் எவை என்பதை நாளை காலை விடியும்போது எனக்கு தாருங்கள்.


 இந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து எவ்வாறு நாம் முன்னேறுவது என்பது பற்றிய உங்கள் கருத்துக்கள் எவை என்பதை... பொருளாதாரத்தை வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை... இந்த பொருளாதார நிலையில் வங்கிகளுக்கு உதவுவது எவ்வாறு என்பதை... சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பது எவ்வாறு என்பதை... நீங்கள் என்னிடம் கூறுங்கள்.


 நான் கூறுவது தவறு என்று நீங்கள் கருதினால். அது தவறு என்பதையும் என்ன தவறு என்பதையும் எனக்குக் கூறுங்கள் என கூறியுள்ளார்

 


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!