கொட்டகலையில் பல்கலைக்கழகம்.அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், அவரின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாகவும் நுவரெலியா மாவட்டம் கொட்டகலையில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது. உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்கள்  பெறுந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போதே இத் தீர்மானம் பற்றி கூறப்பட்டுள்ளது.

மேலும் தோட்டப்பகுதி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பமொன்றை பெற்றுக்கொடுக்க நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்துவது மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் விசேட எதிர்ப்பார்ப்பாக இருந்ததுடன் இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையும் இதன் போது குறிப்பிடப்பட்டது.

இதன் போது கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகமும் சந்ததென்ன எனும் இடத்தில் விசேட பட்டய பல்கலைக்கழகம் ஒன்றும் அம்பேவலவில் தாவரவியல் உயிரியல் கட்டமைப்பு  பல்கலைக்கழகம் ஒன்றும் அமைப்பதற்காக எதிர் வரும் வாரத்தில் கல்வி அமைச்சினால் அமைச்சரவைக்கு ஆவணமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.மேலும் இது 1 வருடத்திற்குள் நிறுவப்பட முடிவுகள் எடுக்கப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.