நாசா உடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் விண்கலம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் வானிலை மாற்றத்தின்  காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்த விண்கலம் செலுத்தப்பட்டிருந்தால் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து புறப்படும் முதல் சுற்றுவட்ட பயணமாக இது இருந்திருக்கும்.
நாசாவின் விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பென்கென் ஆகிய இருவரும், அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட இருந்தனர்.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த நிகழ்வைக்காண அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
ஆனால், மோசமான வானிலை காரணமாக விண்கலம் புறப்பட இருந்த 16 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் சேர்ந்து நாசா செயல்படுத்தும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை அனுப்ப இருந்தது.
உலகிலேயே இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், இந்த சேவையை பயன்படுத்துவது, நாசாவிற்கு செலவை குறைப்பதாக கூறப்படுகின்றது.
வரும் சனிக்கிழமை அன்று விண்கலம் ஏவப்படுவதற்கான அடுத்த வாய்ப்பு அமையும். அதுவும் இல்லையென்றால் ஞாயிற்றுக்கிழமை அதற்கான வாய்ப்பு இருப்பதாக நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.