மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு


கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் சமயத்தில் மேலும் மறு அறிவித்தல் வரை இந்த இரண்டு இடங்களிலும் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. 


மேலும் வருகின்ற 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது வரும் 26 ஆம் திகதி , செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் அதன் பிறகான தினங்களில் இம்மாவட்டங்களில்  தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.இவ் அறிவித்தலானது  தொடர்ந்து மறு அறிவித்தல் வரும் வரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருந்து வந்த போதிலும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் நடைமுறையில் இருக்கும் அதேவேளை  இம்மாதம்,26 ஆம் திகதிக்கு பின்னர், முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது .