Wednesday, May 20, 2020

இலங்கையில் பெரும் மழையால் நீரில் மூழ்கிய நகரங்கள்




இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக பெருமளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான வானிலை நிலவுகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் இன்று நண்பகல் வரை பல நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பெய்த கடும் மழையினால் களுகங்கை மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக  நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவி வருவதாகவும் அவர் கூறினார். இதையடுத்து இரத்தினபுரி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் கொண்ட பகுதிகளில் அதிலிருந்து மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ள மையினால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



மகாவலி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து நாவலப்பிட்டிய பகுதியில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன மேலும் கடும் மழையுடனான காலநிலை நிலவும் பகுதிகளில் ஆங்காங்கே சிறு அளவிலான வெள்ளப்பெருக்கு பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.


இதன்படி காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறைை, மாத்தறை, கொழும்பு, கேகாலை குருணாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இடர் முகாமைத்துவ நிலையம் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, எலபாத, களவாணை மற்றும் கிரியெல்ல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது அதன்படி இரத்தினபுரி பகுதியில் குழந்தையொன்றும் பெல்மதுல்லை பகுதியில் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை பகுதியில் நேற்றைய தினம் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது அதேவேளை அனுராதபுரம் பகுதியில் கடும் காற்றுடனான காலநிலையினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு சுமார் 540 பேருக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!