Wednesday, May 20, 2020

ஐந்து இணையதளங்களை முடக்கியது தமிழீழ சைபர் படையணி-இலங்கை

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இன்றுடன்(18.05.2020), 11 வருடங்கள் பூர்த்தியான நிலையில் இலங்கைை மீது சைபர் தாக்குதல் ஒன்று நடந்துள்ளதாக அறிய முடிகின்றது. இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். குறிப்பாக நேற்றைய தினம் காலை முதல் இலங்கையின் மிக முக்கியமான ஐந்து இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழம் சைபர் படையணி என்ற அடையாளத்தைக் கொண்ட ஒரு பிரிவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான ஹிரு நிறுவனத்தின் செய்தி இணையத்தளம் சைபர் தாக்குதல் ஒன்றிற்கு உட்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 மேலும் இந்த சைபர் தாக்குதலானது தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பானவர்களால் நடத்தப்பட்டதாகவும் அந்த நிறுவனத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது ,அத்துடன் இலங்கைக்கான சீனத் தூதரகத்தில் உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் இவ்வாறான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்தினம் தெரிவித்தார். 

இதுபோன்று கடந்த வருடமும் சுமார் 10 இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முறை குறித்த சைபர் தாக்குதலை தடுத்து நிறுத்த தான் பல்வேறு வகையான நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார் மேலும் மே மாதம் பதினெட்டாம் திகதி இந்த சைபர் தாக்குதல் நடத்துவதற்கான பிரதான காரணம் ஒரு குழுவின் பிரபல்யத்தை உறுதிப் படுத்துவதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.

 அந்த நபர்கள் மற்றும் குறித்த தகவல்களை பற்றி வெளியிடாதிருப்பதே சிறந்தது என்றும் அவர் தெரிவிக்கின்றார். இந்த வருடமும் இவ்வாறான சம்பவம் இடம்பெறும் என்று முன்னதாகவே எதிர்பார்த்து இருந்ததாகவும் அதனை தடுத்து நிறுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்தினம் கூறினார் மேலும் இதனை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை கணினி அவசர தயார் குழு இலங்கை விமானப்படையின் சைபர் பிரிவு மற்றும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து ஏற்கனவே குழுவொன்று தயார்படுத்தி இருப்பதாக தீனதயாளன் கூறினார்.

 மேலும் இலங்கையில் உள்ள அனைத்து வலைத்தளங்களையும் கண்காணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இணையதளத்தில் உள்ள சில குறைபாடுகளினாலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்தினம் தெரிவிக்கின்றார்.

 மேலும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் இணையதளங்களை புதுப்பிப்பது(update) இவ்வாறான சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும் தான் தொடர்ந்தும் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கவனம் செலுத்துவதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முன்னேற்பாடுகளை தொடர்ந்து செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!