நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவான "பொன்மகள் வந்தாள்" திரைப்படம் ஆமேசான் ப்ரைமில் வெளியீடு.நாட்டில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேற்றைய தினம் நேரடியாக அமேசான் ப்ரைமில்  வெளியாகியுள்ளது.

படத்தை வெளியிடுவதற்கு முன்பே சில சினிமா பிரமுகர்களுக்கு படம் காண்பிக்கப்பட்டுள்ளது எனவும் படம் பற்றிய தங்களது கருத்துக்களை அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று முன்தினம் பதிவிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது


கடந்த 29ம் திகதி சரியாக மு.12 மணிக்கு படம் அமேசானில் ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் தமிழ்ரொக்கர்ஸ் இணையதளம் முழு படத்தையும் லீக் செய்துவிட்டது. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அமேசானில் படத்தை ரிலீஸ் செய்ய நேரிட்டதாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது புது படங்கள் எதுவும் வெளிவராமல் இருக்கும் நிலையில், OTTயில் வெளியான முதல் தமிழ் படமும் இப்படி பைரஸியால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கொரோனா பிரச்சனையால் வெளியாகாமல் போனது. அதனால் அந்த படத்தை நேரடியாக OTTயில் வெளியிட சூர்யா முடிவெடுத்தார். அதனால் தியேட்டர்கள் பாதிக்கப்படுகிறது என தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனாலும் சூர்யா OTT ரிலீஸில் உறுதியாக இருந்தார். இனி சூர்யா - ஜோதிகா தரப்பு படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் OTTயிலேயே இனி அனைத்து படங்களையும் ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என தியேட்டர் உரிமையாளார்கள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தினை JJ பிரெட்ரிக் என்பவர் இயக்கியுள்ளார். இதில் முதன் முறையாக ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிர் தரப்பு வக்கீலாக ஆர். பார்த்திபன் நடித்துள்ளார். மேலும் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

பொன்மகள் வந்தாள் OTT ரிலீசுக்கு முன்பே தமிழ் ரொக்கர்ஸ் லீக் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கொரோனா லொக்டவுனுக்கு முன்பு ரிலீஸ் ஆன பல படங்கள் பைரஸியால் அதிகம் பாதிக்கப்பட்டன. தர்பார், பட்டாஸ், சைக்கோ, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற பல படங்கள் தமிழ் ராக்கர்ஸில் திருட்டு தனமாக ரிலீஸ் ஆனதால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த பட்டியலில் பொன்மகள் வந்தாள் படமும் இணைந்துள்ளது.

தமிழ்ரொக்கர்ஸ் இணையதளத்தை முடக்க சினிமா துறையினர் அதிக முயற்சிகள் எடுத்தாலும், அதை முடக்க முடியவில்லை. ஒரு இணையத்தளத்தினை முடக்கினால், domain பெயர்களை மாற்றி மீண்டும் பழைய நிலைக்கு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது OTTயில் ரிலீஸ் ஆகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் அதை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

படம் அதிகம் எமோஷ்னலாக இருந்ததாக பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டரில் கூறி உள்ளார்.